ஹவுதிகள் சவுதியின் 2 விமான நிலையங்கள் தாக்குதல்

 

 

ஏமன் எல்லையையொட்டியுள்ள சவுதி அரேபியாவின் ஜசான், நஜ்ரான் நகரங்களில் உள்ள 2 விமான நிலையங்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். ஏமனில் சவுதி ஆதரவு அரசு படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து செங்கடல் கடற்கரைப் பகுதிகளை மீட்க தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக சவுதி நகரங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை ஹவுதிகள் நேற்று முன்தினம் நடத்தினர்.

சவுதி அரேபியாவின் ஜசானில் உள்ள கிங் அப்துல்லா பின் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம், நஜ்ரான் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் விமான நிலையங்களுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது. அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீதும் தாக்குதல் நடந்தது. ஏமன் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் சவுதி ஆதரவு படைகள் முன்னேறி வரும் நிலையில், சவுதி-ஹவுதி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.