ஓமன் அருகே பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இந்தியர்கள் 11 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘எம்டி ஆன் பீஸ்’ என்ற கப்பல் கடந்த திங்களன்று ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ஏவுகணை அல்லது வெடிகுண்டு போன்ற எறிபொருளால் தாக்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
ஓமன் கடற்கரையில் ஹார்முஸ் நீரிணை வழியாக சென்று கொண்டிருந்த பனாமா கொடியுடன் கூடிய ‘எம்டி ஆன் பீஸ்’ வர்த்தகக் கப்பல் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறோம்.
கப்பலில் இருந்த 19 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள்். இதில், 11 இந்தியர்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். ஓமன் அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, கசாப் நகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதிப்புமிக்க உதவி வழங்கிய ஓமன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இப்பகுதியில் கப்பல்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும். சர்வதேச கடல்வழிகளில் கப்பல் போக்குவரத்தும், வர்த்தக நடவடிக்கைகளும் விரைவில் மீண்டும் தடையின்றி நடைபெற வேண்டும். இவ்வாறு ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.



