
நாகர்கோவிலில் ரயில் பெட்டியில் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் 5வது பிளாட்பாரத்தில், நாகர்கோவில் – கோட்டயம் இடையே இயக்கப்படும் ரயிலின் மாற்று திறனாளிகளுக்கான ரயில் பெட்டி, பராமரிப்பு பணிக்காக கடந்த 11ம் தேதியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில் பெட்டிக்குள் கடந்த 18ம்தேதி பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தை மீட்டு, ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவருக்கு சுமார் 45ல் இருந்து 50 வயதுக்குள் இருக்கும் என்றும், கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.
அவர்கள், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 14ம் தேதி காலை 8 மணியளவில் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்குள் இருந்து வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த ஆண் ஒருவர் இறங்கி செல்லும் காட்சி இருந்தது. அந்த நபர் யார் என்பதை கண்டறிய தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் நிலைய நுழைவாயில் அருகே உள்ள கேமராவில் அதே நபர் உருவம் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை பதிவு செய்து, குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பினர்.
இதில் சம்பந்தப்பட்ட நபர், குமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஜாண்சன் என்பவரின் மகன் ஐயப்பன் (31) என்பதும், அவர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழியில் ஒரு திருட்டு வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார் செண்பகராமன்புதூர் விரைந்தனர். அங்குள்ள மலை பகுதியில் பதுங்கி இருந்த ஐயப்பனை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஐயப்பன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த 14ம் தேதி நள்ளிரவு 12.30க்கு இந்த பெண், 5வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் பெட்டி அருகே நின்றிருந்தார். அப்போது ரயில் நிலையத்தில் ஏற்கனவே சுற்றி திரிந்த ஐயப்பன் அந்த பெண்ணை பார்த்து வலுக்கட்டாயமாக ரயில் பெட்டிக்குள் இழுத்து சென்று, பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி உள்ளார்.
காலால் மிதித்தும், கையால் குத்தியும் மூர்க்கத்தமான தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் அந்த பெண் இறந்ததும், இருக்கைக்கு அடியில் உடலை தள்ளி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் மட்டும் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். மேலும் இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர். கொலை நடந்த அன்று ஐயப்பன் அணிந்திருந்த ஆடையை ஒரு புதருக்குள் வீசி இருந்தார். அதை போலீசார் மீட்டுள்ளனர்.
* கொலையான பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர்?
கொலை செய்யப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன் கூட சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் அவர் சுற்றி திரிந்துள்ளார். இந்த காட்சிகளில் அவர் அணிந்திருந்த பனியன், ஜீன்ஸ் பேன்ட் ஆகியவை தான் தற்போது கொலை செய்யப்பட்ட பெண் அவர் தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தங்க நகைகள் அணிந்திருக்கிறார்.
குறிப்பாக கையில் ஒரு தங்க மோதிரம் இருந்துள்ளது. அந்த மோதிரத்தில் உள்ள ஹால்மார்க் முத்திரையின் படி நடந்த விசாரணையில் அந்த மோதிரம், குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே இந்த பெண் குஜராத் அல்லது ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.



