சீனாவில் 16வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி!

 

சீனாவில் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்பிங் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில், 3 வயது சிறுமியுடன் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 17ஆம் திகதி சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், தாய் தனது மகளுக்குக் காலை உணவு வழங்கிவிட்டு, தூங்க வைத்துள்ளார். சிறுமி அசந்து தூங்கிய இடைவெளியில், தாய் அருகில் உள்ள கடைக்குக் காய்கறி வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென விழித்துக்கொண்ட சிறுமி, வீட்டின் முன்புறம் இருந்த பாதுகாப்பு இரும்புக் கம்பிகள் வழியே வெளியே வர முயன்றுள்ளார். அவ்வேளை எதிர்பாராத விதமாக சிறுமி கம்பிகளுக்கு இடையே சிக்கி, 16வது மாடியின் அந்தரத்தில் தொங்கியபடி அலறியுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டாரும் அக்கம் பக்கத்தினரும், சிறுமி அந்தரத்தில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் சிறுமிக்குத் தாங்குதலாக ஒரு சிறிய நாற்காலியை வைக்க முயன்ற போதிலும், உயரத்தின் காரணமாக அவர்களால் சிறுமியை மீட்க முடியாமல் போனது.

இதையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

பிறகு அங்கிருந்த இரும்புக் கம்பிகளை வெட்டி எடுத்து, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

சிறுமி காயமின்றி மீட்கப்பட்டாலும், சிறு குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில் இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.