
காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கூலிப்படை ஏவி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில், இந்தியர் நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய வம்சாவளி வழக்கறிஞரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன், பஞ்சாப்பை பிரித்து தனி காலிஸ்தான் நாடு கோரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.இந்திய செய்திகள்
பன்னுன் மற்றும் அவரது அமைப்பை தீவிரவாத பட்டியலில் சேர்த்து இந்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில், 2023ம் ஆண்டு மே மாதம் இந்திய அரசு ஊழியரான விகாஷ் யாதவ் என்பவரின் தூண்டுதலின் பேரில், நிகில் குப்தா (55) என்பவன் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதித்துறை மற்றும் அரசு தரப்பு குற்றம் சாட்டினர். கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி தொடங்கிய பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது இந்தக் கொலையை நடத்த வேண்டாம் என நிகில் குப்தா அறிவுறுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா, 2024ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை தெற்கு நியூயார்க் மாவட்ட நீதிபதி விக்டர் மரேரோ முன்னிலையில் நேற்று 80 நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது, நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் 7 மாதங்கள் (235 மாதங்கள்) சிறை தண்டனையும், 300 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.25,500) சிறப்பு அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.



