:
இத்தாலியில் சோனியா காந்தி வாழ்ந்த பூர்வீக வீட்டை வாங்கியுள்ள சீக்கிய தொழிலதிபர் ஒருவர், அதை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவர். இத்தாலியின் வீசென்ஸா மாகாணம் லூசியானா என்ற இடத்தில் சோனியா காந்தியின் பூர்வீக வீடு உள்ளது. இத்தாலியில் வசித்து வரும் சீக்கிய தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங் என்பவர் சோனியாவின் மூதாதையர் வீட்டை 6 ஆண்டுகளுக்கு முன் வாங்கினார்.
அந்த வீட்டை அருங்காட்சியமாக மாற்ற சுக்தேவ் சிங் முடிவு செய்துள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலம் வந்துள்ள சுக்தேவ் சிங் கூறுகையில், கடந்த 1992ல் இத்தாலிக்கு சென்றேன். அமெரிக்காவிற்கு குடிபெயரவிருந்த குடும்பத்தினரிடம் இருந்து சோனியாவின் வீட்டை வாங்கினேன். அந்த வீட்டிற்கு சொத்து வரி உள்பட ரூ.1லட்சம் வரையில் செலவு செய்து வருகிறேன்.
அந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்கும் குருத்துவாரா ஆக மாற்றவும் ஆலோசனைகள் வந்தன. அவற்றை நான் நிராகரித்து விட்டேன். சோனியா காந்தி தனது குழந்தை பருவத்தை கழித்த இல்லத்தை அருங்காட்சியமாக மாற்ற முடிவெடுத்துள்ளேன். அருங்காட்சியகத்திற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில், காட்சிக்கு வைக்க புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் நினைவுப் பொருட்களைக் பெறுவதற்காக சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.



