அமெரிக்க ராணுவத்தின் பென்டகன் அமைப்பின் கீழ் இயங்கிய யூஎஃபோ திட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய பிரபல விஞ்ஞானி எரிக் டேவிஸ் பூமிக்கு வெளியே வேற்றுக்கிரக வாசிகள் குறித்த உண்மைகளை வெளியிட்டுள்ளார். விபத்துக்குள்ளான பறக்கும் தட்டுகளிலிருந்து மீட்கப்பட்ட குறைந்தது நான்கு வெவ்வேறு வகையான ஏலியன் இனங்களின் உடல்களை அமெரிக்க அரசு ரகசிய இடங்களில் பாதுகாத்து வருவதற்கான ஆதாரங்களை தான் நேரில் பார்த்துள்ளதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
நவீன விண்வெளி இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளரான எரிக் டேவிஸ், நியூஸ் நேஷன் ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொண்டு பேசுகையில் இந்த தகவல்களை வெளியிட்டார். அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை தான் ஆய்வு செய்துள்ளதாகவும், அதில் வேற்றுக்கிரக உயிரினங்களின் இருப்பு உறுதியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ‘கிரேஸ்’ ‘நார்டிக்ஸ்’ மனித அளவுள்ள பிரேயிங் மாண்டிஸ் போன்ற தோற்றமளிக்கும் ‘இன்செக்டாய்டுகள்’ மற்றும் பல்லி போன்ற மனித உருவ அமைப்பைக் கொண்ட ‘ரெப்டிலியன்ஸ்’ ஆகிய நான்கு முக்கிய இனங்களைச் சேர்ந்த உடல்கள் அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘க்ளோஸ் என்கவுண்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட்’ அறிவியல் புனைகதை திரைப்படத்தில் காட்டப்படுவது போன்ற சாம்பல் நிறத் தோல், பெரிய தலை மற்றும் கரிய கண்களை உடையவர்கள் ‘கிரேஸ்’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், ‘நார்டிக்ஸ்’ இனத்தவர்கள் மிக உயரமான ஸ்காண்டிநேவிய நாட்டவர்களைப் போல பொன்னிற முடியும், மனிதர்களை ஒத்த முகத்தோற்றமும் கொண்டவர்களாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த இரகசிய உடல்களின் இருப்பிடங்கள் ஒபாமா நிர்வாகத்தின் காலப்பகுதியில் மாற்றப்பட்டதாகவும் டேவிஸ் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையும் அமெரிக்க ராணுவமும் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்ததற்கான எத்தகைய உறுதியான பௌதீக ஆதாரங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக உள்ளது. எனினும், எரிக் டேவிஸின் இந்த தற்போதைய வெளிப்படுத்தல் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



