சென்ற இதழ் தொடர்ச்சி மகா-பாரதம்!

 

–

பாண்டவர்கள் தோற்றுவிட்டார்கள். அவர்கள் காட்டுக்குப் போகிறார்கள்.

துரியோதனனுக்கு என்ன குறை?

அவன் நாட்டை ஆளலாம்.செல்வம் இருக்கிறது. அரண்மனை இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எதிரியாக இருந்தவர்கள் காட்டுக்குப் போய்விட்டார்கள்.ஆனால் அவனுக்கு அமைதி இல்லை.அவர்கள் காட்டில் எப்படி இருக் கிறார்கள்? அவர்கள் அங்கேயும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?அவர்கள் அங்கேயும் நல்ல பெயர் வாங்குகிறார்களா? அவர்கள் மீண்டும் வந்து வெற்றி பெறுவார்களா?

இங்கேதான் பொறாமையின் முழு உருவத்தைப் பார்க்கிறேன்.

பிறர் இன்பம் கண்டு தான் துன்பப்படுதல்.

பிறர் துன்பம் கண்டு தான் இன்பப்படுதல்.

இதற்கு மேலே பொறாமையை எப்படி விளக்குவது?

இது வெறும் பகை அல்ல. இது வெறும் கோபம் அல்ல. அழுக்காறு.

ஒரு குறள்:

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.- குறள் 168.

அழுக்காறு என்று ஒரு பாவி, ஒருவனுடைய செல்வத்தை அழித்து, அவனைத் தீய வழியில் செலுத்திவிடும்.

அழுக்காறு வந்தவனுக்கு முதலில் அழிவது எதிரியின் வாழ்க்கை அல்ல.அவனுடைய சொந்த மனம். அதற்குப் பிறகு அவனுடைய குடும்பம். அதற்குப் பிறகு அவனைச் சுற்றியிருப்பவர்கள். கடைசியில் அவன் எதிரியாக நினைத்தவர்களும் அழிகிறார்கள்.

துரியோதனனிடம் இதுதான் நடந்தது.பீஷ்மருக்குத் தெரியும். துரோணருக்குத் தெரியும்.விதுரருக்குத் தெரியும். திருதராஷ்டிரனுக்குத் தெரியும். கிருஷ்ணர் நேரடியாகச் சொல்கிறார். துரியோ தனனுக்கே ஒரு அளவுக்கு தெரியும்.ஆனால் தெரிந்தும் அவனால் நிறுத்த முடியவில்லை. ஏனென்றால் பொறாமை ஒரு தர்க்க உணர்வு அல்ல.அது மனத்தை ஆக்கிரமிக்கும் உணர்வு.அதனால் அழிவு வரும் என்று தெரிந்தாலும் அழிவை நோக்கிச்செல்கிறான். மகாபாரதப் போரின் எண்ணிக்கைகளைப் பார்த்தாலும் இந்த அழிவின் அளவை உணர முடிகிறது.

ஒரு அக்க்ஷௌஹிணியில் 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள், 1,09,350 காலாட்படை வீரர்கள் என மொத்தம் 2,18,700 போர்வீரர்கள் எனக் கணக்கு தரப்படுகிறது. பாண்டவர்களிடம் ஏழு அக்க்ஷௌஹிணிகளும், கௌரவர்களிடம் பதினொரு அக்க்ஷௌஹிணிகளும் இருந்ததாக மகாபாரதம் கூறுகிறது.மொத்தம் பதினெட்டு அக்க்ஷௌஹிணிகள். 3,936,600 போர்வீரர்கள். போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. ஆனால் அழிவின் காரணத்தை ஒரு நீண்ட சொற்பொழிவில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

வள்ளுவர் ஏழு சீர்களில் சொல்லிவிட்டார்:

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.”

மகாபாரதம் ஒரு கருத்தை ஆயிரக்கணக்கான பாத்திரங்களின் மூலம் விரித்துக் காட்டுகிறது. திருக்குறள் அதை இரண்டு அடிகளில் சுருக்கிவிடுகிறது.

போர்க்களம் எங்கே இருக்கிறது?

குருக்ஷேத்திரம் வெளியே மட்டும் இல்லை.நமக்குள்ளேயும் இருக்கிறது.ஒவ்வொரு நாளும் நம்முடைய மனத்தில் ஒரு சிறிய குருக்ஷேத்திரம் நடக்கிறது.நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் உயர்ந்தால் நமக்கு என்ன உணர்வு வருகிறது? நம்முடைய நண்பன் நம்மைவிட வெற்றி பெற்றால் என்ன நினைக்கிறோம்? நம்முடைய சகோதரன் நம்மைவிட செல்வந்தனாகிவிட்டால் என்ன நினைக்கிறோம்? நம்முடைய குழந்தையைவிட அடுத்தவன் குழந்தை நன்றாகப் படித்தால் என்ன நினைக்கிறோம்?நம்மைவிட ஒருவன் பாராட்டப்பட்டால் என்ன நினைக்கிறோம்?

அவன் விழுந்துவிட்டான் என்று செய்தி வந்தால் நமக்குள் என்ன நடக்கிறது?இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் நம்முடைய மனத்தில் நான் துரியோதனனைப் பற்றி எழுதும்போது அவனை மட்டும் எழுதவில்லை.எனக்குள் இருக்கும் துரியோதனனைப் பற்றியும் எழுதுகிறேன்.ஒரு தருமனுக்குள் துரியோதனன் இருக்கிறான்.ஒரு துரியோதனனுக்குள் தருமனும் இருக்கிறான்.அந்த இரண்டில் எது வளர்கிறது என்பதுதான் மனிதனுடைய வாழ்க்கை.மனிதனும் விலங்கும் பல விஷயங்களில் ஒன்றுதான்.பசி. தூக்கம். கோபம். பயம். இனப்பெருக்கம். தற்காப்பு.

இவை எல்லாம் விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உண்டு. மனிதனை மனிதனாக்குவது அவனுடைய அறிவு மட்டும் அல்ல.அவன் தன் மனத்தைத் திருத்திக் கொள்ளும் திறன்தான்.

மகாபாரதம் நமக்கு துரியோதனனை காட்டுகிறது.திருக்குறள் அவனுக்குள் இருந்த அழுக்காற்றைக் காட்டுகிறது.மகாபாரதம் அழுக்காறு எப்படி ஒரு குடும்பத்தை அழிக்கிறது என்று காட்டுகிறது.திருக்குறள் அழுக்காறு எப்படி ஒரு மனிதனுடைய செல்வத்தையும் மனத்தையும் அழிக்கிறது என்று சொல்கிறது.மகாபாரதம் ஒரு பெரிய கதை.திருக்குறள் ஒரு சிறிய கண்ணாடி.அந்தக் கண்ணாடியில் நம்முடைய முகத்தைப் பார்க்கத் துணிந்தால் போதும். வள்ளுவர் சொல்லும் அறம் என்பது வெளியே செய்யும் சடங்கு அல்ல.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்”. மனத்தில் மாசு இல்லாமல் இருப்பது. அந்த மாசு வந்துவிட்டால் அது அழுக்காறாகிறது.அழுக்காறு கவனிக்கப்படாமல் விட்டால் அவாவாகிறது. அவா நிறைவேறவில்லை என்றால் வெகுளியாகிறது. வெகுளி இன்னாச் சொல்லாகிறது. இன்னாச்சொல் செயலா கிறது. செயல் பகையாகிறது. பகை பழிவாங்கலாகிறது.

பழிவாங்கல் அழி வாகிறது. அந்த அழிவின் கடைசி காட்சிதான் குருக்ஷேத்திரம்.அதனால்தான் மகாபாரதம் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. குருக்ஷேத்திரம் முடிந்துவிட்டது. ஆனால் அழுக்காறு முடிந்துவிடவில்லை. மகாபாரதத்தைப் புரிந்து கொள்ள திருக்குறள் உதவுகிறது.திருக்குறளைப் புரிந்து கொள்ள மகாபாரதம் உதவுகிறது.திருக்குறள் அழுக்காற்றை ஏழு சீர்களில் சொல்கிறது.மகாபாரதம் அதையே ஒரு மனிதனின் முழு வாழ்க்கையாகக் காட்டுகிறது.