சோழ வளநாட்டில், திருமங்கலத்தில் சாமவேதீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவனும், லோக நாயகி என்று அழைக்கப்படும் உமையவளுக்கான திருக்கோயில் அமைந்திருக்கிறது. மூன்று பிராகாரங்கள் கொண்டது அந்தக் கோயில். பலாமரம் இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம். கோயிலைச் சுற்றி நான்கு மாடவீதிகள். கோயிலுக்குச் சற்றுத் தள்ளி ‘கயாபல்குனி’ ஆறு. ஊரின் மத்தியில் ஆயர்வீதி. அந்த வீதியில், வலதும் இடதும் பத்து வீடுகள். மத்தியில் நீண்ட திண்ணை, உள்ளே பெரிய கூடம், பெரிய முற்றம், சமையல் கட்டு என நான்கு கட்டு வீடு ஒன்று உண்டு. அந்த வீட்டை ஒட்டி, ஒரு பெரிய மைதானம் அளவிற்கு கூரை வேய்ந்த மாட்டுத்தொழுவம். அதில், கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலான பசுக்களும் கன்றுகளும் இருந்தன.
அந்த வீட்டை எல்லோரும் ‘பெருசு வீடு’ என்றுதான் அழைப்பார்கள். அந்தத் தெருவில் உள்ள அனைவருமே யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் பசுக்கள் வளர்க்கப்பட்டன. ‘பெருசு வீடு’ என்ற பெயருக்கேற்றாற்போல, பெரிய பாரம்பரியமான குடும்பம். கோவர்த்தனன், அவர் மனைவி கோமகள், அவர்களின் சகோதரர்கள், சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் தந்தையர் என எல்லோரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தார்கள். கோவர்த்தனன், கோமகள் தம்பதியருக்கு ஒரே மகன் ஆநேயர். பொதுவாக யாதவ குலத்தோர், கண்ணனை வணங்கும் மரபினர். ஆனாலும் அந்த ஊரின் சாமவேதீஸ்வரர் மேல் மிகுந்த பக்தி அந்தக் குடும்பத்திற்கு உண்டு. ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் நடக்கின்ற பூஜை, பெருசு வீட்டின் கட்டளை. தினந்தோறும் அபிஷேகத்திற்கான பால், தயிர் மற்றும் விளக்கேற்ற பசு, நெய் எல்லாமும் அந்த யாதவ தெருவில்
உள்ளவர்களே அளித்துவந்தார்கள்.
அந்த ஊர்மக்களுக்கு அதனாலேயே அவர்கள் மேல் மிகுந்த மரியாதை. அரியையும் சிவனையும் இரு கண்களாகவே எண்ணி வழிபட்டார்கள். ஆநேயருக்கு அன்று பதினெட்டாம் வயது துவங்கிய நாள். கோயிலில் விசேஷமான பூஜைகள் நடத்தப்பட்டன. அந்தக் கோயிலின் சிவாச்சாரியார் வேதபுரீஸ்வரர் ஆநேயரின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.“இவன் தோற்றம், சிவனின் அருள் முழுமையும் பெற்றவனாக எனக்குத் தோன்று கிறது. உங்கள் குலம் செய்த தவத்தின் பயன்” தந்தை இடைமறித்தார், “நானும் என் மனைவியும் அதை உணர்கிறோம். ஆனாலும் இவன் கேட்கின்ற கேள்விகள் எங்களால் பதில் சொல்ல முடியாமல் இருக்கின்றன. நீங்கள் இன்று எங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்தி இவனுடன் உரையாடியும் வாழ்த்தியும் அருள வேண்டும்” என்றார்.
“இன்று பெளர்ணமி. உங்கள் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். அர்த்த ஜாம பூஜை முடிந்து நான் வருகிறேன். உணவைவிட உரையாடல் முக்கியம்” ஆநேயருக்கு, இந்தப் பிறந்த நாள் வித்தியாசமாக மட்டுமல்ல, விசேஷமாகவும் அமைய இருப்பதை எண்ணி மகிழ்ச்சி. சாணமிட்டுத் துலக்கிய இடத்தில் தர்ப்பைப் புல் ஆசனத்தில் அமர்ந்து வேதியர் பேச ஆரம்பித்தார். “நான் பேச நீங்கள் கேட்பது என்பதைவிட, நாம் எல்லோரும் ஒரு கலந்துரை யாடல் போல அமைத்துக்கொள்ளலாம்” ஆநேயர், “எனக்கு என்னையும் அறியாமல் பசுவின் மீதும், இசையின் மீதும், குறிப்பாக புல்லாங்குழல் இசை மீதும், எல்லாவற்றிற்கும் மேலாக நம் சாமவேதீஷ்வரர் மீதும் பக்தி. நான் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது மட்டுமல்ல, என் கனவில்கூட இந்த எண்ணங்கள்தான். இவை மட்டும்தான். இது தவிர வேறெதுவும் எனக்கு முக்கியமாகப் படவில்லை. நான் சிவனின் தொண்டன். இது போதும் என்றே தோன்றுகிறது” இதைக் கேட்ட வேதபுரீஸ்வரர்;“புரிகிறது. நான் உன் தந்தை தாயிடமும் இதைத்தான் குறிப்பிட்டேன். ஆநேயா! உன்னை உய்விக்க இந்தச் சூழலை அமைத்ததும் அவன் கருணையே! அவன் திருவருளாலே அவன் தாள் வணங்கி என்பது சத்தியவாக்கு. நீ என்ன செய்தாலும், அது சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள், உனக்கு வாய்த்ததற்கும் சிவன் அருள் மட்டுமே காரணம்” தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுக்கள் ஆமோதிப்பதுபோல கரைந்தன. பசுக்களைப் பார்த்துக்கொண்டே வேதியர் தொடர்ந்தார்.
“எல்லோரும் அறிந்த செய்திதான் எனினும் ஒவ்வொருவரும் பசுவைப் பற்றி ஒரு தகவல் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார் வேதபுரீஸ்வரர். அங்கிருந்த ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள்.
“முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவில் வாசம் செய்கிறார்கள்”
“பின் புறத்தில் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள்”
“தாய்ப்பாலுக்கு நிகராக பசுவின் பால்தான் குழந்தைகளுக்கு முக்கிய ஆகாரம்”
“பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், கோமியம், நெய், சாணம் எல்லாமும் கலந்த பஞ்சகவ்யம் சிறந்த மருந்து”
“ஒருவரின் செல்வவளம் என்பது, பொருள், நிலம் இவற்றையெல்லாம்விட எத்தனை பசுக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அளவுகோல்”
“மாடு என்றாலே செல்வம் என்றுதான் பொருள்”
“புது வீட்டின் கிரகபிரவேசத்திற்கு முதலில் பசுவையும் கன்றையும்தான் நுழையச்செய்கிறார்கள்”
“ஆஹா! அற்புதம். அருமையாகச் சொன்னீர்கள். ஏதோ பசுவைப்பற்றி கட்டுரை எழுதச் சொன்னதுபோலஅவ்வளவு விஷயங்கள்!” என்றவேதபுரீஸ்வரர் தொடர்ந்தார்.
“இன்றும் நம் ஆலயத்தில் முதலில் நடத்துவது கோபூஜைதான். பாற்கடலைக் கடைந்த பொழுது காமதேனுவைத் தவிரவும் ஐந்து பசுக்கள் வந்ததாக ஐதீகம். அவை நந்தா, பத்திரை, சுரவி, சுசீலை, சுபனை ஆகும்.
அங்கு இருந்த ஆநிரைகள் ‘அம்மா’ என்று அழைத்து ஆமோதித்து தலையசைத்தன. மணியின் ஒலி மேலும் அந்த இடத்தின் சாந்தித்யத்தைக் கூட்டியது.
“மிக முக்கியமான இன்னுமொரு விசேஷமான பசுவின் குணம் தெரியுமா? கூட்டம் கூட்டமாக புல்லை மேய்கின்ற பசுக்கள், அசைபோடும் போது மட்டும் கூடியவரையில் தனியாகத்தான் இருக்கின்றன. அதுபோலத்தான், ஒரு மனிதன் தனக்கு ஏற்படுகின்ற அனுபவங்களால் வருகின்ற ஞானம், கற்பதால் உண்டாகின்ற அறிவு எல்லாவற்றையும் தனியே நினைவில் நிறுத்தி அசைபோட்டு அதன்படி வாழ்க்கையை நடத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை பசுக்கள் நமக்குச் சொல்லும் மாபெரும் பாடம்”
“மாடுகள் மேய்ப்பதும் ஒரு வகையான தவம்தான். நம் மனம் பஞ்சேந்திரியங்களால் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டாலும், அதை ஒரு புள்ளியில் நிறுத்துவது தியானம்தான். மாடுகளை மேய்க்கத் துவங்கியதும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு திசைக்குத்தான் செல்லும். பதற்றம் காட்டாமல், குறிப்பாகக் கூச்சலிடாமல் அமைதியாக இருக்கப் பழகிக் கொள். யாதவ குலத்தைச் சேர்ந்தவன் நீ. அதனால் உனக்கு இது எளிதாக வசப்பட்டுவிடும்.
மாட்டின் கண்களைப் பார். கொஞ்சுவது போல குரலை வைத்துக்கொண்டு, ஏதாவது செல்லப்பெயர் வைத்து அழை. உன் குரல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிடும். ஓரிரு நாட்களிலேயே உன் கண் பார்வையைத் தாண்டி எங்குமே செல்லாது. முடிந்த போதெல்லாம் நெற்றியைத் தடவி விடு. உன் மொத்த அன்பும் கரிசனமும் உன் கைகள் மூலமாகத் தெரிவி. எதிர்பார்ப்பில்லாத அன்புதான் எல்லாவற்றுக்குமே ஆதாரம். சின்னச் சின்ன மணிகளை கழுத்தில் கட்டிவிடு. ஏதாவது பூச்சிகளோ விஷ ஜந்துக்களோ அருகில் வர, கழுத்து மணிகளின் ஓசையை வைத்துப் புரிந்துகொண்டு, அருகில் சென்று பார்க்க முடியும்.
உன் செவிகள் எப்போதும் உன்னிப்பாக இருக்கப் பழகிக்கொள். சற்று நேரத்துக்கு ஒரு முறை குரல் கொடுக்கக் கற்றுக்கொள். இன்று இது போதும். நாளை முதல் மாடுகள் சம்பந்தபட்ட எல்லா வேலைகளையும் நீ செய்யப் பழகிக்கொள். இரவு அர்த்த ஜாம பூஜை சமயத்திற்கு கோயிலுக்கு வா. பூஜை முடிந்து நானும் நீயும் பேசிக்கொண்டிருப்போம். இந்த நாள் எல்லோருக்குமே ஒரு சிறந்த நாளாக அமைந்துவிட்டது. சிவாய நம சிவாய நம”மறுநாள் முதல் ஆநேயர் அபிஷேகத்திற்கு பாலுடன் அர்த்த ஜாம பூஜைக்குச் சென்றான். அந்தணர் ஒவ்வொரு நாளும் சொல்லும் செய்திகளை ஆநேயரும் அந்தச் சிவனும் உன்னிப்பாகக் கேட்டார்கள். ஒரு நாள் மிகுந்த உற்சாகத்துடன் ஆநேயர் ஒரு புல்லாங்குழலுடன் வந்தான். அவன் நெற்றியில் திருநீறு பூசியபடியே “என்ன இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறாயே? என்ன விசேஷம்?’’ என்று வேதபுரீஸ்வரர் கேட்டார்.
“நானே இந்த புல்லாங்குழலை தயார் செய்தேன். தினமும் பயிற்சி செய்கிறேன். இதோ வாசிக்கிறேன். கேளுங்கள்’’ புல்லாங்குழல் இசை அவரது மனதையும் சிவன் சிந்தையையும் கவர்ந்தது.
“இவை எல்லாமும் உன் பூர்வ ஜென்ம புண்ணியம், எல்லோரிடத்தும் நீ காட்டும் மரியாதை, எல்லாவற்றிற்கும்மேல் சிவனருள் காரணம்’’ என்றார். மறுநாள் காலை அவனுக்கு பிரம்ம முகூர்த்தத்திலேயே விழிப்பு வந்துவிட்டது. மனதின் உள்ளே இருந்து ஒரு குரல் ‘நமசிவாய நமசிவாய’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது. அந்த நமசிவாய மந்திரமும் சுவாசமும் ஒரே சீராக இருப்பதை உணர்ந்தான். மாட்டுக் கொட்டகையின் நடுவிலே ஒரு மரப்பலகையில் பத்மாசனமிட்டு அமர்ந்துகொண்டான். கண்களை மூடி புருவத்தின் மத்தியில் தன் எண்ணங்களைக் குவித்தான்.
‘நமசிவாய’ எனும் மந்திரம் தொடர்ந்து மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தாய் தந்தையரை கிழக்கு நோக்கி நிற்க வைத்து, அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்கரித்தான். அவர்கள் இருவருக்கும், இவன் நமது குழந்தையாக இருந்தபோதிலும், முற்றிலும் கடவுளின் குழந்தை என்கின்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அவன் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அவனை எல்லா கறவை இனங்களும் பின்தொடர்ந்தன. அவன் கோயிலைக் கடந்தபோது, வெளியில் நின்றிருந்த வேதபுரீஸ்வரர் குரல் உயர்த்தி “சிவோஹம் சிவோஹம்” என்றார்.
“எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார். கோயிலின் உள்ளே இருந்த சிவம் சிரித்துக் கொண்டது. இன்றைய உங்கள் திருவிளையாடல் இவனுடன்தானா என்பது போல சிவனைப் பார்த்து உமையவளும் புன்முறுவல் செய்தாள். ஆநேயரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த மாடுகளும் தங்கள் தலையை ஆட்டி மணிகளை இசைத்து ஆமோதித்தபடி சென்றன. ஒரு இனம் புரியாத பரவசம் அவனில் முழுவதுமாகப் பரவியிருந்தது. மாடுகள் புடைசூழ மேய்ச்சல் நிலத்தை அவன் அடைந்தான். ஒவ்வொரு மாட்டின் அருகிலும் சென்று அதன் நெற்றியைத் தடவிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். பல மரங்களின் நடுவே கொஞ்சம் உயர்ந்து நின்றிருந்த கொன்றை மரம் தன் கிளைகளை அசைத்து அவனை வரவேற்றது. அவனுக்கு அந்தக் கொன்றை மரம் கைலாய மலைபோல்தான் காட்சி தந்தது. கொன்றை மரம் பூக்களை உதிர்த்து அவனை ஆசீர்வதித்தது.
எல்லா பெரிய பயணங்களுக்கும் ஒரு சிறிய காலடிதான் முதன்மையாக இருக்கும் என்பது போல, இனி வர இருக்கும் அந்த இசைப் பிரவாகத்திற்கு ஆரம்பமாக ஒரு துளி இசை அவன் புல்லாங்குழலில் இருந்து வெளிப்பட்டது. கொன்றை மரத்தின் எதிரில் இருந்த ஒரு சிறிய பாறையில் அமர்ந்து கொண்டான். கையில் இருந்த புல்லாங்குழலை எடுத்து இரண்டு கைகளையும் அதனுடன் குவித்து மனதில் சிவனை நினைத்து தொழுதான்.
சொல்லி வைத்தது போல எல்லா கறவை இனங்களும் அவனை நோக்கி செவி சாய்த்தன. கொன்றை மரமாகிய சிவன், புல்லாங்குழல், மற்றும் நான் மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தில் என்பது போல அவன் புல்லாங்குழலை இசைக்கத் துவங்கினான். தன் உயிரோடு கலந்துவிட்ட ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என்பதைத் தன் குழலில் இசையாக வடித்தான். அவனுடைய இந்த நாத வழிபாடு சிவ பூஜையாக அவனுக்குப்பட்டது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மறந்தான். புல்லாங்குழல் இசை மட்டும் ஐந்தெழுத்து மந்திரமாக பிரபஞ்சத்தைச் சூழத் துவங்கியது.
அருகில் இருந்த கறவை இனங்கள் அத்தனையும் தம்மை மறந்து இசையில் ஒன்றின. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புல்லாங்குழலின் இசை அசையும் பொருட்கள் அத்தனையும் அசையாமல் இருக்கச் செய்துவிட்டது. அசையாமல் இருந்த பொருட்கள் அத்தனையும் அசையத் துவங்கின. பிரபஞ்சம் முற்றிலுமாகத் தன்னில் ஒரு மாற்றத்தை, அந்தப் புல்லாங்குழலின் இசையின் மூலம் உணரத் துவங்கியது. செவியின் வழியாக வந்த புல்லாங்குழலின் இசை சிவனையும் தொட்டது. பின் சிவனின் சிந்தையையும் தொட்டது. சிவனும் அந்த இசையில் முற்றிலும் தன்னை மறந்துதான் போனான். அருகில் இருந்த உமையவள் இந்தப் புல்லாங் குழல் இசை எந்த அளவு இந்தப் பிரபஞ்சத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது என்று உணரத் தொடங்கினாள்.
உமையவள் சிவனைத் தொட்டாள். அந்தத் தொடுதலில், சிவனுக்கும் விவரம் புரிந்தது. அந்தக் கொன்றை மரத்தின் அருகில், உமையொருபாகனாக சிவன் ஆநேயரின் முன் தோன்றினான்.“உன் புல்லாங்குழல் இசை இந்தப் பிரபஞ்சத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. இந்தப் புல்லாங்குழல் இசையும் நீயும் என்றும் எங்களுடன்தான் இருக்க வேண்டும். நீயும் என் அடியவராக, ஒரு நாயன் மாராக என்றும் என்னுடன் இருந்து புல்லாங் குழலை இசைத்துக்கொண்டே இருக்க வேண்டும். உன் தாய் தந்தையருக்கும் அந்த வேதியருக்கும் யாம் காட்சி தருவோம். அவர்களையும் யாம் ஆசீர்வதிப்போம்” உமையொருபாகனான சிவனுடன் ஆநேயர் செல்வதை அங்கு புல்மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் கண்டன. மகிழ்ச்சியில் தங்கள் கழுத்து மணிகளை அசைத்தன. ‘சிவோஹம் சிவோஹம்’ என்பதாகவே அவை கேட்டன.



