கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாளத்தில் மாயமான 5,285 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க முடிவு

 

 

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட போதேகோஷி – திரிசூலி வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,455 பேர் உயிரிழந்தனர்; 5,285 பேர் மாயமாகினர். 40 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகளை அரசு முறைப்படி நிறைவு செய்துள்ள நிலையில், மாயமானவர்களை உடனடியாக இறந்தவர்களாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நேபாள சிவில் சட்டப்படி ஒருவர் மாயமாகி 12 ஆண்டுகள் கழித்தே இறந்தவராக கருதப்படுவார். நீதிமன்றம் மூலம் இந்த சான்றிதழைப் பெறுவதிலும் கடும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம், இழப்பீடு மற்றும் பிற சட்டப்பூர்வ உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய, பேரழிவு இடர் குறைப்புச் சட்டம் மற்றும் தேசிய அடையாளச் சட்டங்களில் அவசர சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, அவசர மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்தாலும், புனரமைப்புப் பணிகளின் போது உடல்கள் கிடைத்தால் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.