7 வயது மகனைப் பனிப்பொழிவுக்கு நடுவே தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு மலை ஏறிய சம்பவம்!

 

ஃபூஜி மலையில் சோர்வடைந்த 7 வயது மகனைப் பாதியிலேயே தவிக்கவிட்டு, உச்சிக்குச் செல்ல முயன்ற தந்தையைக் காவல் துறையினர் பிடித்துக் கடுமையாக எச்சரித்தனர்.

ஜப்பானின் புகழ்பெற்ற ஃபூஜி மலையில், தனது 7 வயது மகனைப் பனிப்பொழிவுக்கு நடுவே தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை ஏறிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது என்ன?

ஜப்பானின் நகோயா நகரைச் சேர்ந்த 48 வயது தந்தை, தனது இரு மகன்களுடன் ஃபூஜி மலையின் புகழ்பெற்ற ‘புஜினோமியா’ பாதையில் மலை ஏறிக்கொண்டிருந்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் உள்ள 6-ஆவது சோதனைச் சாவடியை (6th Station) அவர்கள் கடந்தபோது, 7 வயதான இளைய மகன் கடுமையான சோர்வு மற்றும் குளிரின் காரணமாக மேற்கொண்டு நடக்க முடியாமல் அழுதுள்ளார்.

பொதுவாக இதுபோன்ற சூழலில், குழந்தையைப் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு கீழே இறங்குவதே பெற்றோரின் இயல்பான முடிவாக இருக்கும். ஆனால், எப்படியாவது மலை உச்சியை அடைந்துவிட வேண்டும் என்ற வேகத்தில் இருந்த அந்தத் தந்தை, ஒரு விசித்திரமான முடிவை எடுத்தார்.

அழுத சிறுவனிடம் ஒரு குளிர்பானத்தையும் சில தின்பண்டங்களையும் கொடுத்து, “நான் மேலே சென்றுவிட்டு வரும்வரை இங்கேயே காத்திரு” என்று கூறி, ஒரு பெஞ்சில் அமர வைத்துள்ளார். பின்னர், தனது மூத்த மகனை மட்டும் அழைத்துக்கொண்டு தொடர்ந்து மலையேறத் தொடங்கினார்.

மீட்கப்பட்ட சிறுவன்

அப்போது அந்தப் பகுதியில் பலத்த காற்றும், மழையும், கடுமையான பனிமூட்டமும் நிலவியது. பனிக்காற்றில் ஒரு சிறுவன் தனியாக அமர்ந்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்ததை, அங்கிருந்த ஒரு மலைக் குடில் ஊழியர்கள் கவனித்தனர்.

உடனடியாகச் சிறுவனை மீட்ட அவர்கள், அவனுக்குப் போர்வைகளையும், சூடான உணவையும் வழங்கிவிட்டு காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

காவல் துறையின் எச்சரிக்க

தகவல் அறிந்து வந்த போலீஸார், அதற்குள் 8-ஆவது சோதனைச் சாவடி வரை (சுமார் 3 மணி நேர நடைப்பயணத் தொலைவு) சென்றிருந்த தந்தையைத் தொடர்புகொண்டனர். விஷயத்தைக் கூறி அவரை உடனடியாகக் கீழே இறங்கி வருமாறு உத்தரவிட்டனர்.

கீழே வந்த தந்தையைக் காவல் துறையினர் கடுமையாகக் கண்டித்தனர். ஆபத்தான ஒரு மலைப்பகுதியில், மோசமான வானிலைக்கு நடுவே ஒரு சிறு குழந்தையைத் தனியாகத் தவிக்கவிட்டது சட்டப்படி எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தி எச்சரித்தனர். பின்னர், சிறுவன் பத்திரமாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டான். தனது தவற்றை ஒப்புக்கொண்ட தந்தை, “நான் மிகவும் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்துவிட்டேன். என் செயலுக்கு ஆழமாக வருந்துகிறேன்” என்று போலீஸாரிடம் கூறியுள்ளார்.

பயணங்களின் மீதான ஆர்வம் எவ்வளவு இருந்தாலும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உயிரை விட அது முக்கியமானது அல்ல என்பதை உணர்த்தும் ஒரு பாடமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.