ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க புட்டின் திட்டம்

 

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) மூலம் தாக்க நடத்தப்பட்ட சதி முயற்சி, பிரிட்டனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பார்சல் குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை ஏற்றிச் செல்லவிருந்த அன்டோனோவ் (Antonov An-124) ரக விமானத்தின் மீது மோதிய இந்த ட்ரோன், வெடிக்கத் தவறியது. விமான நிலையப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் விழிப்புடன் செயல்பட்டு, அந்த ட்ரோனைப் பிடித்து பாதுகாப்புக் படையினரிடம் ஒப்படைத்தார்.

ட்ரோனில் கண்டெடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள், லித்துவேனியாவில் பிரிட்டன் பார்சல் குண்டு சதி வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போவதாக ஜெர்மன் மற்றும் பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் லைப்சிக் விமான நிலையத்தில் பிரிட்டனுக்கு அனுப்பப்படவிருந்த DHL பார்சல் ஒன்று தீப்பிடித்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் போலந்து நாடுகளிலும் இதுபோன்ற பார்சல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லித்துவேனியா மற்றும் போலந்து நாடுகளில் ரஷ்யாவின் GRU உளவுத்துறைக்காகச் செயல்பட்டதாகக் கூறப்படும் 22 சந்தேக நபர்களை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நெட்வொர்க்கே இந்த ட்ரோன் தாக்குதலுக்கும் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சோள டப்பாவில் சுமார் 600 கிராம் செம்டெக்ஸ் வெடிமருந்து மற்றும் தொலைபேசி சிம் கார்டு, ஆண்டெனா ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் முயற்சி குறித்த விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.