இந்தியாவின் கேரளா கடற்பரப்பில் மூழ்கிய ‘MSC Elsa 3’ சரக்குக் கப்பலில் இருந்து வெளியேறி இலங்கைக் கரையோரங்களில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்களில் இதுவரை 43 கண்டெய்னர் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளதாவது,
வடக்கில் உள்ள யாழ்ப்பாணத் தீவுகள் முதல் தெற்கில் உள்ள காலி வரையிலான கடற்பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன.
தற்போதைய பருவமழைக் காலம் காரணமாக இக்கழிவுகள் கரை ஒதுங்குவது மேலும் தீவிரமடைந்துள்ளது.
இப்பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியில் சுமார் 1,800 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான முழுச் செலவையும் குறித்த கப்பல் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.
இச்சம்பவத்தால் இலங்கையின் கடல்சார் நன்செயல் வலயம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இழப்பீட்டை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் விசேட கூட்டம் நேற்று புதன்கிழமையும் நடைபெற்றது.
லைபீரியக் கொடியுடன் பயணித்த ‘MSC Elsa 3’ என்ற இச்சரக்குக் கப்பல், 643 கண்டெய்னர்களுடன் சென்றபோது, இந்திய நாட்டின் கேரளக் கரையில் இருந்து சுமார் 38 மைல் தொலைவில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி ஏற்பட்ட நீர்க்கசிவினால் கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.



