சிக்கிய ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர்!டாஸ்மாக் முறைகேடு

 

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) நடைபெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் பார்கள் கூட்டமைப்பு அமைத்து டெண்டர்களை முறைகேடாக ஒதுக்கியது தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரதேஷ்ராஜ் சண்முகவேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடியாக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இவர் ஒரு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் நிர்வாகம், பார் டெண்டர்கள் மற்றும் மது உற்பத்தி ஆலைகளுடன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் முறைகேடான பணப்பரிவர்த்தனைத் தரவுகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் முதன்மைச் சந்தேக நபரான ரதேஷ்ராஜ் சண்முகவேல், டாஸ்மாக் நிர்வாகத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டுப் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமாக இருந்தார் என லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், காவல் துறையின் பிடியில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே விமான நிலையங்கள் மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு இந்த லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரதேஷ்ராஜ் சண்முகவேலை விரைந்து கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவருக்கு உதவியாகச் செயல்பட்ட பிற அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.