ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் 6 பேர் பலி!

 

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் தொடரும் நிலையில், ரஷிய நிலப்பரப்புகளை இலக்கு வைத்து உக்ரைன் ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மாபெரும் வான்வழி ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில், ரஷியாவில் குறைந்தபட்சம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பல முக்கிய நகர்ப்புற கட்டடங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளன.

ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைன் ஏவிய 822 ட்ரோன்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதில் சுமார் 600 ட்ரோன்கள் ரஷிய தலைநகர் மாஸ்கோவை மட்டுமே இலக்காகக் கொண்டு ஏவப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார். மாஸ்கோ பிராந்தியத்தில் ட்ரோன் ஒன்று வீட்டின் மீது விழுந்து வெடித்ததில் 83 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

அதேவேளையில், தென்மேற்கு ரஷியாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள மூன்று நகரங்களைக் குறிவைத்து 150-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக அப்பகுதியின் ஆளுநர் யூரி ஸ்லியுசார் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பொடால்ஸ்க் நகரில் அமைந்துள்ள பிரபல ஈ-காமர்ஸ் நிறுவனமான வைல்ட்பெர்ரீஸின் பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்கு மீது ட்ரோன் மோதியதில் அங்குப் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, விண்முட்டும் அளவிற்குப் அடர்ந்த புகை மண்டலம் சூழ்ந்தது.

ரஷியாவின் போர்க்காலப் பொருளாதாரத்தையும், ராணுவத்திற்கு உதவும் வர்த்தக மற்றும் எரிசக்தி மையங்களையும் பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களைப் பலமடங்கு தீவிரப்படுத்தியுள்ளது. ரஷியா தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் இந்த பதிலடித் தாக்குதல் ரஷியப் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.