ரைனோஸ்கிளிரோமா பாதிப்க்கு சத்திர சிகிச்சை

 

உலகளவில் மிக சிலருக்கு மூக்கு மற்றும் நாசி துவாரங்களில் நாட்பட்ட பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவை முகத்தின் தோற்றத்தை விகாரமாக்கிவிடும். இதனை மருத்துவ மொழியில் ரைனோஸ்கிளிரோமா என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலன் அளிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரைனோஸ்கிளிரோமா என்பது மூக்கு மற்றும் நாசி துவாரங்களை பாதிக்கும் நாட்பட்ட பிரத்யேக பாக்டீரியா கிருமி தொற்று பாதிப்பாகும். இத்தகைய பாதிப்பு சிலருக்கு தொண்டை- குரல்வளை -மூச்சுக்குழாய்- கண்- என பல பகுதிகளிலும் பரவி, பாதிப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய பாதிப்பு எம்முடைய அண்டை நாடான இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மிக மிக அரிதாக ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட சுவாசப் பாதைகளில் திசு தடிமன் ஆகி வடுவை ஏற்படுத்தும் அல்லது சுருக்கத்தை ஏற்படுத்தி அவலட்சணத்தை உண்டாக்கும். இதற்கு உரிய தருணத்தில் முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால்… இது மூக்கின் அமைப்பை உருகுலைத்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய பாதிப்பு மருத்துவ ரீதியாக மூன்று நிலையில் வகைப்படுத்தப்பட்டு, அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு, மூக்கடைப்பு- சுவாசிப்பதில் சிரமம்- மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல்- வாசனை நுகரும் தன்மை மற்றும் உணர்வு குறைதல்- குரலில் மாற்றங்கள்- ஆகியவற்றை அறிகுறிகளாக வெளிப்படுத்தும்.

இத்தகைய பாதிப்பு பிரத்யேக பாக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இத்தகைய பாக்டீரியா எம்முடைய நாசி துவாரங்களில் தங்கி படிப்படியாக சுவாச மண்டலத்தின் உறுப்புகளுக்குள் பரவுகிறது. இதனால் கண் பார்வையும் பாதிக்கப்படக்கூடும்.

இதற்கு நிபுணர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு, நவீன பாணியிலான சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறைகளை ஆறு மாத காலம் முதல் ஓராண்டுகள் வரை கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும்.