குஜராத்தில் போலி டாக்டர்கள் 9 கைது: 10, 12வது படித்துவிட்டு மருத்துவம் அம்பலம்

 

முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களின் உயிருடன் விளையாடி வந்த 9 போலி மருத்துவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். குஜராத் மாநிலம் சூரத் மாநகரில் மருத்துவப் படிப்பே படிக்காமல் சிலர் போலி கிளினிக்குகளைத் திறந்து பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்து வருவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்த நிலையில், டிண்டோலி பகுதியில் ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.

அப்போது முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களின் உயிருடன் விளையாடி வந்த ரோஹித் பாட்டீல், பரமானந்த் படேல், ஆர்த்திதேவி மௌரியா, மகேஷ் ராஜ்புத், கமலாபிரசாத் கோண்ட், சோபன் பாட்டீல், மனோஹர்லால் குமாவத், தினேஷ் பாரதி, கிஷோர் விஸ்வாஸ் ஆகிய 9 போலி மருத்துவர்களை வளைத்துப் பிடித்தனர்; இவர்களிடம் இருந்து ரூ.95,138 மதிப்புள்ள மருந்துகள், ஊசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வேட்டை குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராஜ்தீப்சிங் நகும் கூறுகையில், ‘10 மற்றும் 12 வகுப்பு மட்டுமே படித்தவர்கள், கலைப்பிரிவு பட்டதாரிகள் மற்றும் காம்பவுண்டர்களாக வேலை பார்த்த நபர்கள் மருத்துவர்கள் போல் நடித்து, தினசரி ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை சம்பாதித்து அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடியது சோதனையில் அம்பலமாகியுள்ளது’ என்று தெரிவித்தார். இந்த மோசடி கும்பல் மீது டிண்டோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக கடுமையான பிரிவுகளில் மேல்நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.