தியாக மனப்பான்மை!

 

மாலை கல்லூரி வேலை நேரம் முடிந்து மணி அடித்தது. கல்லூரி மாணவி மாதவி தன் புத்தகப் பையை சுமந்தபடி வேகமாக கல்லூரியை விட்டு வெளியே வந்தாள். அவள் அவசர அவசரமாக கிளம்புவதைக் கண்ட அவளது கல்லூரித் தோழிகள், “என்னடி மாதவி? வேகமாகப் போகிறாய். எல்லோரும் ஜாலியாக பேசிக்கிட்டே போகலாமே” என்றனர்.“சாரி டி! இன்று என் அக்கா, அக்கா வீட்டுக்காரர், அக்காவின் குழந்தைகள் எல்லோரும் ஊரிலிருந்து மாலையில் வருகிறார்கள். அதனால் நான் சீக்கிரம் ேபாக வேண்டும்” என்று கூறிவிட்டு, ஆட்டோ ஒன்றைப் பிடித்து அதில் ஏறி அமர்ந்தாள். ஆட்டோ அவளது வீட்டை நோக்கி விரைந்து சென்றது.

அரை மணி நேரத்தில் ஆட்டோ அவளது வீட்டு வாசலில் வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கி அவள் வீட்டு வாசற்படியை மிதித்ததுதான் தாமதம், “சித்தி” என்று கூறிக்கொண்டே அக்காவின் இரு குழந்தைகளும் ஓடி வந்து மாதவிைய கட்டிக் கொண்டன.ஒரு குழந்தைக்கு வயது ஐந்து, அடுத்த குழந்தைக்கு வயது மூன்று. இரண்டும் பெண் குழந்தைகள். இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டாள். பின்னர் இரண்டு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

வீட்டின் உட்புறம், நடுக்கூடத்தில் மாதவியின் அம்மா சீதாலெட்சுமி, அப்பா ராமச்சந்திரன், அக்கா மைதிலி, அக்காவின் கணவர் சுந்தரம் ஆகியோர் சோபாவில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.மாதவியை பார்த்ததும் அக்கா மைதிலி எழுந்து வந்து தங்கையின் கைகளை பிடித்துக் கொண்டாள். அக்காவும், தங்கையும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் உள்ளவர்களாக இருந்தனர். ‘பாசமலர்கள்’ என்று கூறலாம்.“மாதவி! எப்படி இருக்கே?” என்றாள் மைதிலி.“நான் நல்லா இருக்கேன். நீதான் அக்கா இளைச்சுப் போயிட்டே” என்றாள் மாதவி.“மாதவி உனக்கு விஷயம் தெரியுமா? உங்கக்கா முழுகாம இருக்கா” என்றாள் அம்மா சீதாலெட்சுமி.

“மூன்றாவது குழந்தை பிறக்கப் போகுதுன்னு சொல்றியா?” என்றாள் மாதவி.மைதிலி வெட்கப்பட்டு தலை குனிந்தாள்.“மாதவி! உனக்கும் காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா, எங்கள் கடமை முடிஞ்சிடும். வயதான காலத்தில் பேரன், பேத்திகளை கொஞ்சிக்கிட்டு இருப்போம்” என்றாள் சீதாலெட்சுமி.

“எனக்கு கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம்? கொஞ்ச காலம் சுதந்திரப் பறவையாக இருக்கிறேனே” என்றாள் மாதவி.“ஏன் மாதவி? அப்போ நான் சிறைப் பறவையா?” என்றாள் மைதிலி.“இல்லை அக்கா! நீயும் மச்சானும் ஜோடிக் கிளிகள்” என்றாள் மாதவி.“ஏன் மாதவி? என் மூக்கு கிளிமூக்கு மாதிரி இருப்பதால் கிண்டல் செய்கிறாயோ?” என்றார் அக்கா வீட்டுக்காரர் சுந்தரம்.“ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன். தப்பா நினைச்சுக்காதீங்க மச்சான்” என்றாள் மாதவி. அனைவரும் சிரித்தனர்.

ஒரு வாரம் அம்மா வீட்டில் இருந்து விட்டு மைதிலியும், கணவரும், குழந்தைகளும் புறப்பட்டுச் சென்று விட்டனர். கலகலப்பாக இருந்த வீடு வெறிச்சோடி காணப்பட்டது. மாதவி கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தாள். ஏப்ரல் மாதம் பல்கலைக்கழகத் தேர்வு வந்து விட்டது. சிரமப்பட்டுப் படித்துத் தேர்வு எழுதி விட்டு, தேர்வின் முடிவை எதிர்பார்த்து இருந்தாள் மாதவி.இதற்கிடையில் மைதிலி தாய்மை அடைந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. புகுந்த வீட்டில் மாமனார், மாமியார் இருவரும் பல வருடங்களுக்கு முன்பே காலமாகி விட்டார்கள். மைதிலி தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மட்டும் வசித்து வந்தாள். உதவிக்கு வேறு யாருமில்லை.

எனவே பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள். குழந்தைகளும் அவளுடன் வந்துவிட்டன. கணவர் சுந்தரம் மட்டும் தன் வீட்டில் வசித்து வந்தார். தானே சமையல் செய்து சாப்பிட்டு வந்தார்.பிரசவத்திற்கு வந்த மைதிலியை சீதாலெட்சுமி கவனித்துக் கொண்டாள். குழந்தைகள் இருவரும் சித்தி மாதவியின் அரவணைப்பில் இருந்தன. மைதிலி தாய்மை அடைந்து எட்டு மாதம் முடிந்து ஒன்பதாம் மாதம் ஆரம்பம்.அந்த சூழ்நிலையில் மைதிலிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டிய பொழுது, மைதிலிக்கு மஞ்சள் காமாலை நோய் வந்திருப்பது தெரிய வந்தது. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இரண்டு உயிர்களையும் காப்பாற்றுவது கடினம் என்றார் மருத்துவர்.

குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர். மைதிலிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒன்பதாம் மாதத்தில் மைதிலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பெண் மருத்துவர் வந்து பார்த்து விட்டு குழந்தை பிறக்கப் போவதை உறுதிப்படுத்தினர்.அடுத்த அரை மணி நேரத்தில் மைதிலி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். காமாலை நோய் உள்ளதால் மைதிலியை குழந்தையை தொடவோ, தாய்ப்பால் கொடுக்கவோ மருத்துவர் அனுமதிக்கவில்லை. குழந்தைக்கு புட்டிப்பால் போடப்பட்டது. நல்ல வேளையாக குழந்தைக்கு காமாலை நோய் பரவவில்லை.

ஆனால், குழந்தை பிறந்த பதினைந்தாம் நாள் மைதிலியின் உடல் நிலை மோசமானது. தான் இறந்து விடுவோம் என்பதை உறுதியாக எண்ணிய மைதிலி, மாதவியை அருகில் அழைத்தாள். அவள் கையை பிடித்தபடி மெல்லப் பேசினாள்.“மாதவி! இனி நான் பிழைக்க மாட்டேன்” என்றாள்.“அப்படிச் சொல்லாதே அக்கா! எனக்கு உன்னைத் தவிர சகோதரி யார் இருக்கிறார்கள்?”“மாதவி! என் குழந்தைகளுக்கு தாய்க்குத் தாயாக இருந்து அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும்.”“அக்கா கவலைப்படாதே! நான் பெற்ற குழந்தைகளை போல் பார்த்துக் கொள்கிறேன்…” அக்காவின் கையில் சத்தியம் செய்து கொடுத்தாள் மாதவி.

மைதிலி மெல்லக் கண்ணை மூடினாள். மூச்சு சிறிது சிறிதாக நின்றுவிட்டது. தாய் சீதாலெட்சுமி, தந்தை ராமச்சந்திரன், கணவர் சுந்தரம், தங்கை மாதவி ஆகியோர் ‘ஓ’வென்று கதறி அழுதனர். கதறி அழுது கொண்டிருந்த குழந்தைகளை மாதவி அணைத்துக் கொண்டு சமாதானப் படுத்தினாள்.மைதிலி இறந்த பிறகு அனைவரும் ஒரு நாள் அமர்ந்து ஆலோசித்தனர். கணவர் சுந்தரம், “நான் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன். மைதிலி இடத்தில் வேறு யாருக்கும் இடமில்லை” என்றான். குழந்தைகள் மாதவியை கட்டிக் கொண்டு, சுந்தரத்தின் கூட வர மறுத்தன.

இப்போது மாதவி பேசினாள். “மச்சான்! என் அக்கா மைதிலி என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள். நானும் அப்படியே. அவளுக்கு கொடுத்த சத்தியத்தின் படி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. நீங்கள் வேறு திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண் தனக்கென்று குழந்தை பிறந்து விட்டால், என் அக்காவின் குழந்தைகளை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துவாள்.எனவே குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு தியாகமாகவே இதை நான் செய்ய விரும்புகிறேன். இனி எனக் கென்று எந்த ஆசையும் தனியாக இல்லை. நான் உங்களுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட சித்தமாக உள்ளேன்” என்றாள் மைதிலி.

இப்போது சுந்தரம் பேசத் தொடங்கினான். “மாதவி! அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்து விடாதே. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். என்னால் உனக்கு எந்த சுகமும் கிடையாது. உனக்கு ஏற்ற மனதிற்குப் பிடித்த மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்” என்றான்.“இல்லை. தனக்காக மட்டும் வாழ்வது வாழ்க்கை அல்ல. பிறருக்காக வாழ்வதுதான் வாழ்க்கை. தியாகம் செய்வதும் ஒரு யாகம் போலத்தான். அக்காவின் குழந்தைகள் எனக்கும் குழந்தைகள்தான். அவர்களை கண் போல பாதுகாத்து வளர்த்து ஆளாக்குவது என் கடமை. அக்காவிற்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். எனக்கென்று குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். இதற்குச் சம்மதித்தால் உங்களுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட சம்மதம்” என்றாள் மாதவி.

அவளது தன்னலமின்மை, தியாக மனப்பான்மை, மன உறுதி ஆகியவற்றைக் கண்டு வியந்த சுந்தரம், அவளைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தான். சுந்தரம்-மாதவி திருமணம் நெருங்கிய உறவினர் முன்னிலையில் எளிமையாக முடிந்தது.குழந்தைகள் இருவரும் ஓடி வந்து “அம்மா..!” என்று கட்டிக் கொண்டன. சீதாலெட்சுமியின் கைகளில் கைக்குழந்தை இருந்தது. அதை வாங்கி மடியில் வைத்துக் கொஞ்சினாள் மாதவி.“தாலாட்டுப் பாடவா? தாயாக மாறவா? தூங்காத கண்களை தூங்க வைக்கவா…?