1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் நிவாரணம் விசேட குழுவை நியமிக்க பிரேரணை!

1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (3) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்று (30) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு நடவடிக்கை திருத்தம் செய்யப்பட்டது.

நவம்பர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு 1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தவாறு அன்றைய தினம் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2508/27ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெறவுள்ளது.

(அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில்) இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.