ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – அமெரிக்க100%வரி

 

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் சுங்க வரி விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.

ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிக்கும் ‘லின்ட்சே ஓ கிரகாம் சட்டம் 2026’ மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262 – 159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 7-ம் தேதி இந்த மசோதா அமெரிக்க செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் ரஷ்யாவிடம் அதிகளவில் எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளான சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் மீது 100% வரை சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அவர் கையெழுத்திட்டவுடன் நடைமுறைக்கு வரும்.

 

இந்நிலையில் அமரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதனால், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடரும்.

நாட்டின் வர்த்தக, பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்படும்.

இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் இச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் உயர் மட்ட அளவில் ஏற்கெனவே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறும்போது, “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைக் குறைக்கவும், தங்களுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளவும் அமெரிக்கா இந்த சுங்க வரி மிரட்டலை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடும்.

வர்த்தக ரீதியாக சாதகமாக இருக்கும் வரை இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்து தன் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 51.1 சதவீதத்தை ரஷ்யாவே வழங்கியுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, வெனிசுலா, பிரேசில், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் இணைந்து வழங்கியதை விட அதிகமாகும்.

எனினும், எரிசக்தி கொள்முதலைப் பரவலாக்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்தும் கொள்முதல் செய்வதை இந்தியா அதிகரித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.