சக்தியின் எட்டு நிலைகள்.

.

‘‘நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு விதமாக என் பிரகிருதி பிரிவு கொண்டிருக்கிறது,‘‘ என்கிறார். பிர என்றால் ஆதி; கிருதி என்றால் உருவாக்கம் என்று பொருள். பிரகிருதி என்றால் மூலத்தையும், அதைத் தொடர்ந்ததானவற்றையும் உருவாக்கியவர் என்று பொருள். அதாவது பிரபஞ்சம் மற்றும் அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்குக் காரணமாக உள்ள பிரதான சக்தியே பிரகிருதி.

இந்தக் கணக்கை சுவாமி சித்பவானந்தர் இவ்வாறு விளக்குகிறார்:

‘‘மூலப்பொருட்களை பாகுபடுத்துவதில், இன்றைய விஞ்ஞானத்துக்கும், சனாதன தர்மத்துக்கும் வேறுபாடு உண்டு. எந்தப் பொருளிலிருந்து அதிலிருந்து வேறாக இன்னொரு பொருளாகப் பிரிக்க முடியாதோ அதுவே மூலப்பொருள் (Element) என்கிறது விஞ்ஞானம். உதாரணமாக நீர் மூலப்பொருள் அல்ல; அது கூட்டுப் பொருள். நீர் வாயுவும், பிராண வாயுவும் சேர்ந்து நீர் உருவாகிறது. ஆனால் நீர் வாயு, பிராண வாயு இரண்டுமே மூலப் பொருட்கள். வேறு எதனின்றும் இவை தோன்றியவை அல்லது தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. இந்த வகையில் பல மூலப் பொருட்கள் இருக்கின்றன. இவற்றின் கூட்டாகவே உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் உருவாகியிருக்கின்றன.

விஞ்ஞானப்படி மண், நீர் இரண்டும் கூட்டுப்பொருட்கள். ஆனால் நெருப்பு, ஒரு பொருள் அல்ல; அது சக்தி (not Matter; but Energy). எங்கும், எதிலும் வியாபித்திருப்பது வானம் என்ற மூலப்பொருள். (Ether).சனாதன தர்மத்தின்படி அதாவது இந்தியத் தத்துவ தரிசனத்தின்படி, ஐந்து பொறிகள் வாயிலாகவே உலகம் பொருள்படுத்தப்படுகிறது. இந்த பஞ்சேந்திரியங்கள் அல்லால் உலகம் புலனாகாது.

மனிதனின் ஐம்புலன்களும், இயற்கையின் ஐம்பூதங்களுடன் இயைந்தே பணியாற்றுகின்றன. காது கேட்கிறது என்றால், அந்த ஓசைக்குக் காரணம் வானம். மேனி ஸ்பரிசிக்கிறது என்றால் இதற்கு வீசும் காற்று காரணம். கண் பார்க்கிறது என்றால், இந்தக் காட்சிக்கு தீ (ஒளி) காரணமாக இருக்கிறது. நாக்கு சுவைக்கிறது. இதற்குக் காரணம், நீர். மூக்கு வாசனையை நுகர்கிறது என்றால், இந்த மணத்துக்கு மண்தான் காரணம். இவ்வாறு உலகை அறிவதற்கு ஐம்பூதங்கள் மூலப் பொருட்களாக விளங்குகின்றன.

இந்த ஐந்து பூதங்களும் சூட்சுமம், ஸ்தூலம் என்ற இரண்டு நிலைகளாக இருக்கின்றன. சூட்சும பூதங்கள் ஸ்தூல பூதங்களாக வடிவெடுப்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. இதன்படி, சூட்சும பூதம் ஒவ்வொன்றும் இரண்டு சம பாகங்களாகப் பிரிகின்றன. ஒரு பாதி தன்னுடைய ஸ்தூல அமைப்புக்காக நின்று விடுகிறது; மற்ற பாதி நான்கு அரைக்கால் ஆகி, பிற நான்கு பூதங்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக ஆகாசத்தை எடுத்துக் கொண்டால், சூட்சும ஆகாசம் அரை பங்காகவும், வாயு, அக்னி, நீர், மண் ஆகியவை தலா அரைக்கால் (எட்டில் ஒரு பங்கு) பங்கு களாகவும் இணைந்திருக்கின்றன. நான்கு அரைக்கால் சேர்ந்தால் அரை; சூட்சும பங்கு அரை; ஆக மொத்தம் ஒன்று. இப்படியே நீர், நெருப்பு, வாயு, மண் ஆகியவையும் ஸ்தூல பூதங்களாக நிலைத்திருக்கின்றன.

அடுத்த மூன்று – மனம், புத்தி, அகங்காரம். எதையும் உணர்ந்து கொள்ளும் தன்மை மனத்துக்கு உண்டு. ஐம்புலன்கள் வழியாக காட்சி, ஓசை, நுகர்ச்சி, ருசி, ஸ்பரிசம் ஆகியவற்றை மனம் தெரிந்துகொள்கிறது. இவற்றில் நல்ல காட்சி, கெட்ட காட்சி, இனிய ஓசை, கொடூர ஓசை, இனிப்பு ருசி, கசப்பு ருசி, மென்மையான வருடல், முரட்டுப் பிடி என்றெல்லாம் நல்லதையும், கெட்டதையும் பாகுபடுத்திக் காட்டுகிறது, புத்தி. இவ்வாறு மனமும், புத்தியும் உடனிருப்பதால் தன்னையே கர்த்தாவாகக் கருத வைக்கிறது அகங்காரம். பூமிக்கு மேலே விருட்சமாக வளர்ந்தாலும், மண்ணுக்குள்ளேயே புதைந்திருக்கும் விதை போலத்தான் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தகரணங்கள்.

இந்த எட்டு வகை பிரகிருதிகளே இருபத்து நான்கு தத்துவங்களாக விரித்துச் சொல்லப்படுகின்றன. இந்த பஞ்சபூத மகா தத்துவங்களில் விஞ்ஞான கோணம் இருப்பது குறிப்பிடத் தக்கது.’’கிருஷ்ணன் அக்னியைப் பிரதானமாகச் சொல்கிறார். நம் வீட்டுச் சமையலறை அக்னியை அவர் சொல்லவில்லை. நம் வாழ்க்கையின் அனைத்து உருவங்களும் அக்னி சொரூபமே என்கிறார். ஆதாரபூர்வமானது அக்னி என்பது அவருடைய கருத்து. அதனாலேயே இன்றளவும் அக்னி, பூஜைக்குரியதாகப் போற்றப்படுகிறது. கற்கால மனிதருக்கு அக்னியே தெய்வம்.

காட்டு மிராண்டிகளாகத் திரிந்த அவர்கள் தற்செயலாக கற்களையும், மரக் கொப்புகளையும் ஒன்றோடு ஒன்றைத் தேய்க்க தீ மூண்டது. அதன் பிறகே உணவை சமைத்து சாப்பிடும் நாகரிகம் தோன்றியது. வீட்டு பூஜையறையில், மற்றும் கோயிலில் விளக்கேற்றப்பட்டு, அந்த ஒளியால் அங்கே ஆன்மிக நேயம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும், உணவுக் கூடங்களிலும் அக்னியால் அன்னம் உருவாக்கப்பட்டு லௌகீக நேயம் கடைபிடிக்கப்படுகிறது. சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை ஒருவருடைய பிறப்பு முதல் இறப்புவரை அனைத்துமே அக்னி சாட்சியாகத்தான் நடைபெறுகின்றன.

ஜொராஷ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அக்னியை இறைவனின் புனிதச் சின்னமாகக் கருதி அதன் மூலம் கடவுளை வழிபடுகிறார்கள். இதனாலேயே இவர்களை ‘நெருப்பை வணங்குபவர்கள்’ என்றும் கருதுவதுண்டு.தமிழ்நாட்டில் சர்வேஸ்வரனான சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக மண்ணுக்கும், விண்ணுக்கும் ஓங்கி உயர்ந்து நின்றான். தன் நெற்றிக் கண்ணிலும் அக்னியைத் தேக்கி வைத்திருக்கிறான்.புவியியல் காண்

திருஞான சம்பந்தரும், ராமலிங்க அடிகளாரும் ஜோதியோடு கலந்து ஐக்கியமானவர்கள்தானே! ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி,’ என்று அக்னியை முன்னிறுத்தித்தானே இறைவனை வள்ளலார் அடையாளம் காட்டினார்! அன்று அந்த திருவருட் பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த அக்னி இன்றும் வடலூரில் சத்திய தரும சாலையில் உணவு தயாரித்து, அன்பர்களின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டிருக்கிறதே!தன்னை நெருங்குபவற்றை அக்னி அழித்தாலும், அது மனித உயிர்களை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே.’’

– என்று திருமூலர் 724வது திருமந்திரமாக உரைக்கிறார்.

உடல் அழிந்துவிட்டால், உயிரும் உடலை விட்டு நீங்கி விடும். அதற்குப் பிறகு உயிருக்கு உற்ற துணையான ஆன்மா மெய்ஞ்ஞானமாகிய பரம்பொருளை எவ்வாறு போய்ச் சேரும்? கிருஷ்ணனின் உபதேசப்படி, உயிர் இருக்கும்போதே அதற்கான முயற்சியை மேற்கொண்டால்தானே, இந்தப் பிறவியில் இல்லாவிட்டால், அடுத்த பிறவியிலாவது அல்லது அதற்கடுத்த பிறவிகளிலாவது பரம்பொருளுடன் ஒன்றிட முடியும்? அதற்கு உடம்பு அனுசரணையாக இருக்க வேண்டுமே!

சனாதன தர்மப்படி, அக்னி தேவன் என்றே நெருப்பு போற்றப்படுகிறது. ஹோமங்கள், யாகங்கள், வேள்விகளில் அக்னி வளர்த்து அதில் இடப்படும் ஆஹுதிகளை அக்னி தேவனே எடுத்துக் கொண்டுபோய் உரிய தேவதைகளிடம் சேர்ப்பிக்கிறான் என்று நம்பப்படுகிறது. இந்த வகையில் மனிதருக்கும், தேவருக்கும் இடையே ஒரு நட்புப் பாலமாக அக்னி தேவன் செயல்பட்டுவருகிறான். அக்னி ஒன்றுதான் மாசுபடாத, மாசுபடுத்தப்பட முடியாத பூதமாகத் திகழ்கிறது.

வானம்கூட கருமேகத்தால் மாசுபடுகிறது; பூமியும், மனிதனால் விலக்கப்படும் கழிவுகளால் அழுக்கடைகிறது. நீர் மாசும், காற்று மாசும் நாம் தினந்தோறும் அனுபவித்து வரும் அவஸ்தைகள். ஆனால் நெருப்பு மட்டும் மாசுபட முடியாதது. அதை மாசுபடுத்த அதனை அண்டும் எதுவும் அதனோடு ஐக்கியமாகி, சாம்பலாகவும் ஆகிவிடுகிறது. ‘நான் நெருப்பு, என்னை நெருங்காதே,’ என்றெல்லாம் பவித்திரமானவர்கள் தம்மை ஆபத்து நெருங்கும்போது சவால் விடுவதை அறிந்திருக்கிறோம். இதனாலேயே அக்னி, ஆன்மிக ரீதியாக முற்றிலும் தூய்மையானதாக கருதப்படுகிறது.

அக்னி வெறும் வெப்பம் மட்டுமல்ல, அது ஒளியும் கூட. நம் மனதிலிருந்து அறியாமை என்ற இருளை விரட்டவல்ல பிரகாசம் அது. அஞ்ஞானம் என்னும் இருளை விலக்கி ஞானம் என்னும் ஜோதியை வழங்குகிறது. அதாவது நம் தீய எண்ணங்கள், கர்ம வினைகள், செய்திட்ட பாவங்கள் அனைத்தையும் ஆன்ம அக்னியால் பொசுக்கி விடவேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை.

மேலே குறிப்பிட்ட பிரகிருதியின் எட்டு நிலைகளில், கடைசி மூன்றான மனம், புத்தி, அகங்காரம் இவற்றில் அகங்காரத்தின் சர்வாதிகார கூத்தை நாம் தினமும் அனுபவிக்கிறோம்.

ஆமாம், ஞான ஜோதியை ஆன்மாவிடம் நெருங்க விடாமல் அது தடுக்கிறது. அகங்காரம் தலையிடாத நம் நடவடிக்கை என்று ஏதேனும் ஒன்று இருக்கிறதா? கோயிலுக்கு ஏதேனும் உபயமா? அதை நான்தான் செய்தேன் என்று விளம்பரமாக அறிவிப்பு செய்யச் சொல்கிறோம். அதற்காகப் பிறரைவிட கூடுதல் சலுகைகளுடன் முதல் மரியாதையையும் எதிர்பார்க்கிறோம். இந்த ‘ரேட்‘டில் நம்மைவிட அதிக மதிப்புள்ள உபயத்தை வேறு யாராவது செய்திருந்து அவருக்கு நம்மை விட அதிக மரியாதை கிடைத்து விட்டால் மனம் வெதும்புகிறோம் – அகங்காரம். ‘நான்’ என்பது நிழல்தான், கருமைதான்; தவிர்க்கப்பட வேண்டியதுதான்.

ஞானம் வேண்டும் என்று மனதின் மூலையில் லேசாக ஒளிர்கிறதா, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமக்கு முன்னால் போட்டி போட்டுக் கொண்டு ஓடோடி வரும் அகங்காரத்தைத் தடுத்து நிறுத்தத்தான் வேண்டும். இதனால் சொற்பமான, அற்பமான சுகங்கள் கிட்டாதுதான்; போகட்டும்; ஆன்ம ஞானம் தரும் பேரின்பம் இதையெல்லாம்விட மிகவும் மேம்பட்டது.

இதை வலியுறுத்தத்தான் கிருஷ்ணன், இந்த பிரகிருதியையும் அதன் எட்டு நிலைகளையும் பற்றிக் கூறி எட்டாவது நிலையில் அர்ஜுனன் விழுந்து தடுமாறக் கூடாது என்று எச்சரிக்கிறார்.

பிறக்கும்போதே மனமும், புத்தியும் உடனிருந்தாலும், அகங்காரம் இல்லாத பரிசுத்தம் அப்போது நிலவியது. ஆனால் புத்தி வளரவளர, மனம் பல கோணங்களில் அலைபாய, அகங்காரம் உடனே வந்து குடிபுகுந்து விடுகிறது. ஆமாம், இந்த அகங்காரம் வெளியே இருந்து உள்ளே நுழைகிறது. இதற்கு வளரும் புத்தியும், அலைபாயும் மனமும் உறுதுணையாக நிற்கின்றன.

அதனாலேயே பரம்பொருளை நெருங்க நாம் முயற்சிக்கும் போதெல்லாம், அகங்காரத்தைப் பணிந்து, ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்,’ என்று கெஞ்சியும், கடுமையாகவும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது! வெளிச்சூழலால் நமக்குள்ளே வளர்ந்திருக்கும் இந்த அகங்காரத்தை விலக்க அந்த வெளிச் சூழல்கள் இப்போது உதவுமா? உதவாது. உதவ முன் வராது. ‘அது உன்பாடு, நீயே அதிலிருந்து விடுபட முயற்சி செய்’ என்று கூறி அவை ஒதுங்கிக் கொள்ளும். அகங்காரத்தைப் பற்றிக்கொண்ட நாம்தான் இப்போது அதை விட்டு விடுதலையாக வேண்டும். அதற்கு பகவானின் நேயத்தோடு ஆன்மாவை ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும்.