55.72 சவரன் தங்கக் கிரீடம் சபரிமலை கோவிலில் மாயம்

 

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 சவரன் எடையுடைய தங்கக் கிரீடம் மாயமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதற்குப் பதிலாக, அசல் கிரீடத்தைப் போன்ற வடிவம் மற்றும் அளவைக் கொண்ட போலிக் கிரீடம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தமை ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அமிகஸ் கியூரி தலைமையிலான குழுவினர் சபரிமலை திருவாபரணங்கள் மற்றும் நகைகளைச் சரிபார்த்து தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது, சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தபோதே தங்கக் கிரீடம் மாயமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த தங்கக் கிரீடம் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், அது தொடர்பான விபரங்கள் கோயில் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையாக வழங்கப்பட்ட கிரீடத்தில் வைரங்களைப் போன்ற வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், தற்போது பாதுகாப்பு அறையில் காணப்படும் போலிக் கிரீடத்தின் எடை அசல் கிரீடத்தைவிட குறைவாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அறையில் இருந்த கிரீடத்தைச் சோதனை செய்தபோது அதன் எடை 240 கிராம் மட்டுமே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐயப்பன் கோயிலின் பாதுகாப்பு அறையில் சிசிரிவி கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.