
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள இயற்கை வளங்கள் மீது பலஸ்தீன மக்களுக்கு உள்ள நிரந்தர இறையாண்மை உரிமையை உறுதிப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவாக வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இரண்டாவது குழுவினால் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 151 நாடுகள் வாக்களித்துள்ளது.
இத்தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல், கொலம்பியா, மைக்ரோனேசியா, நௌரு, பலாவு மற்றும் பராகுவே ஆகிய 7 நாடுகள் வாக்களித்தன. மேலும் 11 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்துள்ளன.
இலங்கைக்கு மேலதிகமாக இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட முக்கிய நாடுகள் பலவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்திலுள்ள பலஸ்தீன மக்களுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் பிரதேசத்திலுள்ள அரேபிய மக்களுக்கும் அவர்களின் இயற்கை வளங்கள் மீதான நிரந்தர இறையாண்மை எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தீர்மானம், அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது நிலம், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை நிர்வகிக்கவும், அவற்றிலிருந்து பயனடையவும் உள்ள உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அத்துடன், இஸ்ரேல், பலஸ்தீன இயற்கை வளங்களைச் சுரண்டுவதையோ அல்லது அழிப்பதையோ நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் இத்தீர்மானம், அவ்வாறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு அல்லது இழப்பீடு கோருவதற்கு பலஸ்தீன மக்களுக்கு உள்ள உரிமையையும் அங்கீகரித்துள்ளது. குறிப்பாக நீர் விநியோகக் கட்டமைப்புகள், கழிவகற்றல் தொகுதிகள் மற்றும் மின்சார வலையமைப்புகள் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை அழிப்பதையும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதையும் நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் தீர்மானம் வலியுறுத்துகிறது.
பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும், பேச்சுவார்த்தை மூலமான இரு-நாடு தீர்விற்கும் இலங்கை நீண்டகாலமாக ஆதரவு வழங்கி வரும் நிலையில், இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையானது பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் இத்தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையின் இரண்டாவது குழு மட்டத்தில் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இறுதி அங்கீகாரத்திற்காக ஐ.நா. முழுப் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பொதுச் சபைத் தீர்மானங்கள் பொதுவாகச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் தன்மையற்றவை எனினும், உறுப்பு நாடுகளின் சர்வதேச அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முக்கிய பிரகடனமாக இவை கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



