
மதுரை தனிஷிக் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தந்தை சுரேஷ், நிஷாந்தின் காதலி மீனாட்சி ஆகிய இருவரையும் வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் 11.62 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை முகமூடி அணிந்த ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரைக்குமான பதிவுகளைப் பார்த்தபோது சிசிடிவி கேமராவில் கையில் டாட்டூவுடன் வந்த இளைஞர் ஒருவர் 1ஆம் தேதியும், 2 ஆம் தேதி தொப்பி அணிந்தவாறு இயல்பாக வந்த இளைஞரையும் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அந்தக் காட்சிகளோடு 12 ஆம் தேதி முகமூடியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் அடையாளங்களை ஒப்பிட்டபோது இரு வீடியோவிலும் கையில் டாட்டூ இருப்பது தெரியவந்துள்ளது..
மேலும் நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவுகளைப் பார்த்தபோது இளைஞர் ஒருவர் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்தவாறு கையுறை ஆகியவற்றை அணிந்து பைக்கில் அதிவேகமாக பேக்குடன் சென்றது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது
பின்னர் நிஷாந்த் குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திய இளைஞரான நிஷாந்த் யூடியூப் சேனல்களுக்கும் வீடியோ எடிட்டிங் பணியைச் செய்வதோடு கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தனது நண்பர்களோடு சேர்ந்து ஜாலி ரெய்டு போவது சுற்றுலாத் தளங்களுக்கு சுற்றி திரிவதும் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது தனது கல்லூரிக் காலத் தோழியும் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சருமான மீனாட்சியையும் பழக்கமாகியுள்ளார். மீனாட்சி மொபைல் போன்கள் அறிமுகபடுத்தும் பிரபல யூடியூப் சேனலில் வேலை பார்த்துள்ளதோடு, தனியாக இன்ஸ்டாகிராம் சேனல் நடத்தி 1 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் 14 ஆம் தேதி நிஷாந்தின் வீட்டின் அருகே தன்ஷிக் நகைத்கடை புதிதாகத் திறக்கபட்டிருக்கிறது. மூன்று தளங்களைக் கொண்ட நகைக்கடையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் எலக்ட்ரிக், பிளம்பிங் மற்றும் லிப்ட் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நோட்டமிட்ட நிஷாந்த இதைப் பற்றி தன்னுடைய தோழி மீனாட்சியிடம் தெரிவித்துள்ளார்.
மீனாட்சிக்குப் பணத்தேவை இருப்பதால் ’மணி ஹெஸ்ட்’ சீரிஸ் ஸ்டைலில் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டம் குறித்து இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். மீனாட்சிக்கு சிசிடிவி கேமராக்கள் குறித்து தெரியுமென்பதால் அவர் அதுகுறித்து நிஷாந்திற்கு விளக்கி கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் திட்டம் தீட்டியபடி கடந்த 12 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு இரும்பு சாரம் வழியாக மூன்றாவது தள மாடிக்குச் சென்ற நிஷாந்த் லிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் லிப்ஸ்டிக் ரோபின் மூலமாக இறங்கி லிப்ட் ஷட்டரை உள்புறத்தில் இருந்து வெளியில் திறந்துள்ளார்.
பின்னர் ஷட்டரை மீண்டும் திறக்க முடியாமல் போய்விடும் என்பதால் ஷட்டரின் நடுவில் கம்பியை வைத்துவிட்டு மெதுவாக ஒவ்வொரு தளமாக இறங்கிச் சென்று பின் படிக்கட்டு வழியாக தரைத்தளத்தில் உள்ள நகைக்கடைக்குள் இறங்கியுள்ளான்.
இதை தொடர்ந்து கடைக்குள் விற்பனையாக வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக எந்தவித பதற்றமும் இன்றி எடுத்து பேக் ஒன்றில் பத்திரமாக வைத்துள்ளார்.
பின்னர் அதனை தோளில் போட்டு சென்று மீண்டும் லிப்டில் உள்ள ஷட்டரின் உள்ள கம்பியை எடுத்துவிட்டு அதே லிப்டின் மூலமாக ஒவ்வொரு தளமாக கயிறு மூலமாகச் சென்று அங்கிருந்து சாரம் வழியாக இறங்கியுள்ளான்.
கொள்ளையடிப்பதற்காக தனது தோழி கொடுத்த பைக்கைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பேக்குடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுற்றி சுற்றிவந்துள்ளான்.
இதையடுத்து அதிகாலை தனது தந்தை சுரேஷிடம் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு பேக் இருப்பதாகக் கூறி வீட்டில் வைக்குமாறு கூறியுள்ளார். அதனை சுரேஷ் வாங்கி வீட்டில் வைத்த பின்னர் வீட்டிற்குச் சென்ற நிஷாந்த் மீண்டும் பேக்கை எடுத்து பல்வேறு பகுதிகளிலும் பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே மாடக்குளத்தில் நிஷாந்த் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளிக்கு ஆட்டோவை எடுத்துச் சென்ற நிஷாந்த், தான் நகைக்கடைக்குச் சென்றபோது வேவு பார்த்த உடைகள் மற்றும் கொள்ளையடித்தபோது பயன்படுத்திய உடைகள் என அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்தி விட்டு அந்தப் பகுதியில் நகைகளைப் பதுக்கி வைத்துவிட்டு மீண்டும் ஆட்டோ மூலமாகச் சென்றுள்ளான்.
பின்னர் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குத் தப்பியுள்ளார். இது சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் நிஷாந்தின் வீட்டிற்குக் கடந்த 13 ஆம் தேதி மாலை சென்று காவல்துறையினர் நிஷாந்தின் தந்தை சுரேஷிடம் பல மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
பின்னர் பைக் யாருடையது என்ற அடிப்படையில் பார்த்தபோது திருப்பாலை பகுதியில் உள்ள நிஷாந்தின் காதலியான மீனாட்சியின் பைக்கைக் கொள்ளை அடித்த நகைகளை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நான்கு நாட்களாக நிஷாந்தை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் செல்போன் நெட்வொர்க் மூலமாக காவல்துறையினர் பிடிக்க முயன்ற போதும். அவ்வப்போது செல்போனைஅனைத்து தப்பியோடியுள்ளான்.
பின்னர் செல்போன் மூலமாக தோழி மீனாட்சியைத் தொடர்புகொண்டு பேச முயன்றபோது மீனாட்சி எங்கெல்லாம் நகைகளைப் பதுக்கி வைத்திருந்தார் என்பது குறித்தான தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது.
பின்னர் நிஷாந்தின் மீனாட்சியின் கைது செய்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் நிஷாந்தின் தந்தை சுரேஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் மீனாட்சியை மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு 5 கிலோ அளவிற்கு தங்க நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினரிடம் கூறிய நிலையில் அதனை காவல்துறையினர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் நிலையத்திற்குப் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கடையிலிருந்து எடை இயந்திரங்கள் மற்றும் நகை பெட்டிகள் எடுத்து வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று இரவு நிஷாந்தின் தந்தை சுரேஷ், மீனாட்சி ஆகிய இருவரையும் நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இருவரும் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதனிடையே நிஷாந்தின் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளியில் 2 ஆவது நாளாகக் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா ? என்பது குறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினரையே வியக்கும் வைக்கும் வகையில் நிஷாந்த் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய நிலையில் நிஷாந்தைப் பிடிப்பதற்காக தனிப்படையினர் தொடர்ந்து தேடிவருகின்றனர்.



