திருமணமான பிறகு பெண்மணிகள் கருவுறுதல் தொடர்பான பரிசோதனைகளின்போது, தற்போது வைத்தியர்கள் சலைன் இன்ஃப்யூசன் சோனோகிராபி எனும் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். இது ஏன் அவசியம் என்பதை வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
இன்றைய திகதியில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட திருமணமான தம்பதிகள் செயன்முறை கருத்தரிப்பின் மூலம் கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.
சிலருக்கு இதில் முதன்முறையாக தோல்வி அடைந்த பிறகு வைத்தியர்கள் அவர்களுக்கு எஸ்.ஐ.எஸ். என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் சலைன் இன்ஃப்யூசன் சோனோகிராபி எனும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய பரிசோதனையின் போது உள்ளே செலுத்தப்படும் பிரத்யேக திரவம் – கருப்பையகம்- கருப்பைக் குழி ஆகியவற்றில் துல்லியமாக ஆராய்ந்து அதில் ஏதேனும் சிறிய அளவிலான பாதிப்புகள் இருந்தால், அதனை கண்டறிகிறது.
இந்த பரிசோதனை ஏனைய டிரான்ஸ்வஜைனல் ஸ்கேன் மற்றும் ஹிஸ்டரோசல்பிங்கோகிராம் ஆகிய பரிசோதனைகளை விட நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அந்த பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்படாத பாதிப்புகளை இத்தகைய பரிசோதனையின் போது துல்லியமாக கண்டறிய முடிகிறது.
இதன் காரணமாக கருவுறுதல் தொடர்பான பெண்களின் சந்தேகங்களுக்கும் செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சையில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தையும் கண்டறிய முடிவதால் இதற்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.



