அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் தற்போது எதிர்ப்பு தெரிவிக்காவிடின் நாட்டில் ஜனநாயகம் மரணிக்கும். கட்சி பேதங்களுமின்றி தற்போது அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு புதன்கிழமை (30) சென்று தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் பழிவாங்கல், எதிர்க்கட்சிகளின் பிரதிவாதிகளை முடக்கும் நோக்கத்தை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சான்றழிப்புக்கு அமைவாகவே பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, நாமல் ராஜபக்ஷ பலமாக சவாலாக இருப்பதால் அரசியல் களத்தில் இருந்து நாமல் ராஜபக்ஷவை நீக்குவதற்கான நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் தற்போது எதிர்ப்பு தெரிவிக்காவிடின் நாட்டில் ஜனநாயகம் மரணிக்கும். கட்சி பேதங்களுமின்றி தற்போது அனைவரும் ஒன்றுப்பட வேண்டும்.
ஜனநாயகத்தையும், நாட்டின் சட்டவாட்சியையும் பாதுகாப்பதற்கு உரிய சகல நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுப்போம்.கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடுவோம் என்றார்.



