தோள்பட்டை வலி- சிறுநீரக கற்களால் உண்டாகும் வலி- சத்திர சிகிச்சைக்கு பிறகான தசைகளால் ஏற்படும் வலி – மென்மையான திசுக்களின் செயல்பாட்டை மீள் உருவாக்கம்- மூட்டு வலி- குதிகால் வலி- ஆகியவற்றிற்கு புதிதாக அறிமுகமாகியுள்ள எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக்வேவ் தெரபி எனும் ஊடுருவல் அல்லாத சிகிச்சை முறை நல்ல பலனை அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மருத்துவ மொழியில் பிளாண்டர் பாசிட்டிஸ் – டென்டினிட்டிஸ்- ஆகிய பாதிப்புகளால் உண்டாகும் வலியை குறைப்பதற்கு உயர் ஆற்றல் கொண்ட அலைகளை செலுத்தி சிகிச்சை வழங்குகிறார்கள். எம்மில் சிலருக்கு வலி, விறைப்பு, வீக்கம், தசை இயக்கத்தில் குறைபாடு, தசை பலவீனம், சோர்வு, ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால்… அவை தசைகளின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என வகைப்படுத்தப்பட்டு, அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது இத்தகைய தருணத்தில் மருந்தியல் சிகிச்சையுடன் எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் தெரபி எனும் நவீன சிகிச்சையையும் மேற்கொள்கிறார்கள்.
இதன் மூலம் உடலுக்குள் செலுத்தப்படும் அதிக ஆற்றல் கொண்ட அலைகள் தசைகளை தூண்டி, அதன் இயல்பை மீட்டெடுக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் தசை காயங்கள்- தசை வலி – போன்றவற்றை நீக்குவதற்கு இத்தகைய தெரபி முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறது. மேலும் இத்தகைய ஊடுருவல் அல்லாத சிகிச்சை ஒவ்வொரு நோயாளிக்கும் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
இத்தகைய சிகிச்சை மூட்டு மற்றும் குதிகால் வலி பாதிப்பிற்கும் நிவாரணம் வழங்குகிறது. இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் குருதி ஓட்டம் சீரடைந்து, வலி குறைகிறது. இதனால் இத்தகைய சிகிச்சைக்கு தற்போது நோயாளிகளிடம் வரவேற்பும் அதிகரித்து வருகிறது.



