
ஜப்பானில் வசித்து வந்த பிரபல இலங்கை சமூக ஊடகப் பிரபலமும் யூடியூப்பருமான ஆஷா நயோமி வீரவர்தன பிரசவத்தின்போது ஏற்பட்ட அரிய மருத்துவச் சிக்கல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
33 வயதான அவர், தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், பிரசவத்தின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலப் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் வெளியிட்ட தகவலின்படி, பிரசவத்தின்போது பனிக்குட நீர் இரத்த நாளங்களுக்குள் சென்றதால் ஏற்பட்ட கடுமையான மருத்துவச் சிக்கலே மரணத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இது ‘அம்னியோட்டிக் திரவ எம்பொலிசம்’ எனப்படும் அரிதான, உயிருக்கு ஆபத்தான பிரசவச் சிக்கலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
பிரசவத்தின்போது திடீரென ஏற்பட்ட இந்த நிலைமையைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவசர சிகிச்சைகளை மேற்கொண்டு குழந்தையைப் பாதுகாப்பாகப் பிரசவிக்கச் செய்துள்ளனர். எனினும், நயோமியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் பல மணி நேரம் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அதேவேளை, மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அவர் பெற்றெடுத்த ஆண் குழந்தை உயிர் பிழைத்துள்ளதுடன், தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக அவரது சகோதரி அயேஷா வீரவர்தன தெரிவித்துள்ளார்.
நயோமியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவரது உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், அவரது சகோதரி அயேஷா வீரவர்தன, பிரேதப் பரிசோதனை மற்றும் மரணச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பனிக்குட நீர் இரத்த நாளங்களுக்குள் சென்றதால் ஏற்பட்ட பாதிப்பே மரணத்திற்குக் காரணம் என விளக்கமளித்துள்ளார்.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நயோமியின் பெயரைப் பயன்படுத்தி குடும்பத்தினரின் அனுமதியின்றி சிலர் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அவ்வாறான நிதி சேகரிப்புகளுக்கும் குடும்பத்தினருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பத்தினரின் தீர்மானத்தின்படி, நயோமியின் இறுதிக்கிரியைகள் ஜப்பானிய மரபுகளுக்கு அமைவாக ஜப்பானிலேயே நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் இலங்கைக்குக் கொண்டுவரப்படமாட்டாது என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் அவரது இறுதிக்கிரியைகளில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளதாகவும், இலங்கையில் ஏழாம் நாள் நினைவாக சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தனது கணவருடன் வாழ்ந்து வந்த நயோமி, அந்நாட்டின் அன்றாட வாழ்க்கை, உணவுக் கலாசாரம், இலங்கை மற்றும் ஜப்பானிய குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைத் தனது YouTube மற்றும் TikTok காணொளிகள் மூலம் பகிர்ந்து இலங்கை மக்களிடையே பிரபலமடைந்திருந்தார்.
அவரது மறைவுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



