நிதிக் கையாடல் நீதிபதிக்கு பிணை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமாரை பிணையில் விடுவிக்க மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று (13) அனுமதி வழங்கியுள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிக் கையாடல் தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமார், கடந்த ஏப்ரல் மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதற்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

முன்னாள் நீதிபதி சார்பில் சட்டத்தரணி ஜெகனின் அறிவுறுத்தலுக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரணி பே. பிரேம்நாத் மன்றில் ஆஜராகியிருந்தார்.

களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையாடல் தொடர்பில், பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் முன்னாள் நீதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.