
சாதாரண ஒரு நீலக்கல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ‘சோத்பீஸ்’ ஏலத்தில் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சி 4.9 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
ரஷ்யப் பேரரசின் வரலாற்றுடன் நேரடித் தொடர்புடைய 197.80 காரட் எடையுள்ள அபூர்வ நீலக்கல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ‘சோத்பீஸ்’ (Sotheby’s) ஏலத்தில் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சி 4.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.41 கோடி) விற்பனையாகியுள்ளது.
ஒரு காலத்தில் ரஷ்ய அரச கிரீட நகைகளின் அங்கமாக இருந்து, 1903-ஆம் ஆண்டு ‘வின்டர் பேலஸ்’ விருந்தில் ரஷ்யப் பேரரசி மரியா ஃபியோடோரோவ்னா அணிந்திருந்த இந்த கல், தற்போது பிரபல கார்டியர் பிரேஸ்லெட்டின் மையப்பகுதியாக பதிக்கப்பட்டு ஏலத்திற்கு வந்தது.
ஏலத்திற்கு முன்பு இதன் மதிப்பு அதிகபட்சமாக 1.7 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (சுமார் 2 மில்லியன் டாலர்) வரை மட்டுமே போகும் எனக் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முகலாயர் காலத்து தொடர்பும் ரஷ்ய அரண்மனையும்
எஸ்.எஸ்.இ.எஃப் மற்றும் குபெலின் சான்றிதழ்களின்படி, இது வெப்பப்படுத்தப்படாத இயற்கையான இலங்கை நீலக்கல் ஆகும்.
இதன் தனித்துவமான வெட்டு அமைப்பு, இது முகலாயர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. 18-ஆம் நூற்றாண்டில் பேரரசிகள் எலிசபெத் மற்றும் கேத்தரின் தி கிரேட் ஆகியோரால் சேகரிக்கப்பட்ட புகழ்பெற்ற ரத்தின குவியலில் இதுவும் ஒன்றாக இருந்தது.
ஆரம்பத்தில் ஃபேபர்ஜே (Fabergளூ) நிறுவனத்தால் வைரங்கள் பதிக்கப்பட்டு, 249.25 காரட் எடையுள்ள மற்றொரு நீலக்கல்லுடன் இணைந்து ஒரு ஜோடி ப்ரூச்களாக (Brooches) வடிவமைக்கப்பட்டிருந்தது.
1903 ‘வின்டர் பேலஸ்’ விருந்தில் பேரரசி அணிந்த கல்
1903-ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர் ஸ்பர்க்கில் உள்ள வின்டர் பேலஸில் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்தில், டென்மார்க் இளவரசியாக பிறந்த ரஷ்ய பேரரசி மரியா ஃபியோடோரோவ்னா, 17-ஆம் நூற்றாண்டு மாஸ்கோ பாரம்பரிய உடையில் இந்த இரட்டை நீலக்கற்களை தனது ஆடையின் முன்பகுதியில் அணிந்திருந்தார். ரஷ்ய பேரரசின் ஆடம்பரத்திற்கு சான்றாக அமைந்த அந்த தோற்றம், இன்றும் இந்த நீலக்கல்லுக்கு பெரும் வரலாற்று மதிப்பைத் தருகிறது.
ரஷ்ய புரட்சிக்கு பிறகு கைமாறிய வரலாறு
ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அரச நகைகளைப் பட்டியலிட்ட சோவியத் அரசாங்கம், வரலாற்று முக்கியத்துவம் குறைவானது என கருதி மூன்றாம் பிரிவில் வைத்த இந்த நீலக்கல்லை 1920-களில் ரகசியமாக வெளிநாடுகளுக்கு விற்றது.
1927-ஆம் ஆண்டு, ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போன பாடகி கன்னா வால்ஸ்கா இதை ‘கார்டியர்’ நிறுவனத்திடமிருந்து வாங்கி, நீண்ட நெக்லஸில் பதக்கமாக அணிந்தார். பின்னர் 1929-ல் 256.60 காரட் முகலாய மரகத கல்லுடன் இணைத்து இதை மாற்றியமைத்தார்.
1971 மற்றும் 1992-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சோத்பீஸ் ஏலங்களில் வெவ்வேறு நெக்லஸ் வடிவங்களில் இது மீண்டும் விற்பனைக்கு வந்தது.
2015-ஆம் ஆண்டில் கார்டியர் நிறுவனம், 1920-களின் ‘ஆர்ட் டெகோ’ பாணியில் வைரங்கள் பதிக்கப்பட்ட நவீன பிரேஸ்லெட்டில் இந்த நீலக்கல்லைப் பொருத்தியது.
கணித்ததை விட இருமடங்கிற்கும் அதிகமாக 4.9 மில்லியன் டாலருக்கு இது விலை போனதற்கு முக்கியக் காரணம் இதன் வரலாற்றுப் பின்னணி தான். வெறும் ரத்தின கல்லாக மட்டுமல்லாமல், ரஷ்யப் பேரரசின் வீழ்ச்சி, புரட்சி மற்றும் புகழ்பெற்ற நபர்களின் கைமாறிய கதை ஆகியவற்றை கொண்டிருப்பதால் பழங்கால பொக்கிஷங்களை சேகரிப்பவர்கள் இதற்கு பெரும் தொகையைக் கொடுத்து வாங்கியுள்ளனர்.



