கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகளின் வலுவான பாதுகாப்பு அரண்களைத் தகர்க்க உக்ரைன் இராணுவம் மனிதனில்லா ‘ஸாம்பி கார்களை’முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது. ‘விவால்டி’என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ரகசியத் தாக்குதல் நடவடிக்கையில் 250 ரஷ்ய வீரர்கள் சரணடைந்து சிறைபிடிக்கப்பட்டதாக உக்ரைனின் 3-வது ராணுவப் படைப்பிரிவுத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஆண்ட்ரி பைலெட்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் பழைய சோவியத் காலத்து கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பழைய பிடிஆர் ரக கவசப் படைவீரர் ஊர்திகளில் அதிகளவிலான வெடிபொருட்களை நிரப்பி, தொலைநிலை கட்டுப்பாட்டு கருவி மூலம் ரஷ்யத் தளங்களை நோக்கி உக்ரைனியப் படைகள் செலுத்தியுள்ளன. அதேவேளையில், திசைதிருப்பும் நடவடிக்கையாக மற்றொரு பகுதியில் தாக்குதல் நடத்துவது போலக் காட்டி ரஷ்யப் படைகளை உக்ரைன் ஏமாற்றியுள்ளது. இந்த எதிர்பாராதத் தாக்குதலால் ரஷ்ய அரண்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டு, நிலைகுலைந்த ரஷ்ய வீரர்கள் கூட்டமாகச் சரணடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய தளபதி ஆண்ட்ரி பைலெட்ஸ்கி, “ரஷ்யப் தரப்பில் சுமார் 2,000 பேர் வரை உயிரிழப்புகளையும் இழப்புகளையும் சந்தித்துள்ளனர், மேலும் 250 வீரர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். தனது சொந்தப் படைவீரர்களின் உயிரைப் பாதுகாக்கவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிரிகளின் அரண்களை ஊடுருவவுமே இத்தகைய தரைவழி ட்ரோன் மற்றும் வெடிபொருள் வாகன உத்திகளைப் பயன்படுத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த வெற்றிகரமான தாக்குதலின் மூலம் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள முக்கியப் பகுதிகளை உக்ரைனியப் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. மேலும், ‘விவால்டி’ தளத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தரைவழி மற்றும் வான்வழி ட்ரோன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது.



