ஈரான் அணுஆயுதத் தளத்தை புதுப்பிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்!

 

ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள பிரபல பார்ச்சின் ராணுவ வளாகத்தில் உள்ள ‘தலேகான்-2’ என்ற ரகசிய அணுஆயுத ஆராய்ச்சி மையத்தை ஈரான் அரசு அதிவேகமாக மீண்டும் கட்டி எழுப்பி வருவதாகப் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வான்வழித் தாக்குதல்களில் இருமுறை தகர்க்கப்பட்ட போதிலும், அந்த நிலத்தடி மையத்தை ஈரான் அரசு மீண்டும் புனரமைத்து வருவது சர்வதேச சமூகத்திலும் மேலைநாடுகளிடையேயும் பெரும் அணுஆயுதப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ‘வாண்டர் டெக்னாலஜிஸ்’ வெளியிட்ட சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த ‘அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான அமைப்பு’ கட்டுமானப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதை உறுதி செய்துள்ளது. உளவுச் செயற்கைக்கோள்கள் மற்றும் வான்வழிப் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகப் பாதிக்கப்பட்ட நிலத்தடி கட்டடத்தின் மேல் மிகப்பெரிய பிளாஸ்டிக் தார்பாய் மூடப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அப்பகுதியில் கிரேன், புல்டோசர், கான்கிரீட் கலவை வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இரவோட இரவாகப் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக 2024 அக்டோபர் மற்றும் 2026 மார்ச் மாதங்களில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய ‘பங்கர் பஸ்டர்’ (Bunker-Buster) ஏவுகணைத் தாக்குதல்களில் இந்த மையம் கடுமையாகச் சேதமடைந்தது. ஆனால், தற்போது குண்டுவீச்சால் ஏற்பட்ட பெரிய துளைகளை தடிமனான கான்கிரீட் மூடிகளால் அடைத்துள்ள ஈரான், எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டாலும் தாங்கும் வகையில் கட்டடத்தைச் சுற்றிப் பலமான கான்கிரீட் கவசப் சுவர்களையும் அமைத்து வருகிறது.

கடந்த 2000-களின் தொடக்கத்தில் ஈரானின் ‘அமாத்’ என்ற ரகசிய திட்டத்தின் கீழ் அணுஆயுத வெடிபொருட்களைச் சோதிக்கும் அதிநவீன ஆய்வகம் இங்கு இயங்கி வந்ததாகப் சர்வதேச அணுசக்தி முகமை நம்புகிறது. தாக்குதல்களுக்குப் பிறகும் தொடர்ந்து இந்த ஆபத்தான மையத்தை ஈரான் சீரமைத்து வருவது, அவர்கள் மீண்டும் அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முயல்கிறார்களா என்ற பலத்த சந்தேகத்தையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய போர் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.