தனியாகப்பயணம் செய்ய பாதுகாப்பான- ஆபத்தான நாடுகளின் பட்டியல்

 

2026-ல் தனியாகப் பயணம் செய்ய பாதுகாப்பான மற்றும் ஆபத்தான நாடுகளின் பட்டியலை ஸ்கொயர்மவுத் நிறுவனம் வெளியிட்டுள்ளது. . குறிப்பாக முதல் முறையாக புதிய இடங்கள் செல்லும் பயணிகளுக்கு இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை.

உலகம் முழுவதும் சோலோ டிராவல் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அல்லாமல், தனியாகப் பயணம் செய்து புதிய இடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் அனுபவங்களை அறிந்து கொள்ள பலர் விரும்புகின்றனர். ஆனால், அத்தகைய பயணங்களில் பாதுகாப்பு மிக முக்கியமான அம்சமாக இருப்பதால், எந்த நாட்டைத் தேர்வு செய்கிறோம் என்பது பயண அனுபவத்தை தீர்மானிக்கக்கூடிய காரணியாக மாறுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டிராவல் இன்ஷூரன்ஸ் நிறுவனமான ஸ்கொயர்மவுத், 2026-ஆம் ஆண்டுக்கான சோலோ டிராவல் பாதுகாப்பு தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐரோப்பாவின் சிறிய நாடான சான் மரினோ, 0.78 என்ற மிகக் குறைந்த ரிஸ்க் இன்டெக்ஸுடன் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சோலோ டிராவல் நாடாக முதலிடம் பெற்றுள்ளது. அன்டோரா இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து ஆஸ்திரியா, செக் குடியரசு, கத்தார், எஸ்டோனியா, புருனே, டென்மார்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த நாடுகள் உயர்ந்த தரவரிசை பெற முக்கிய காரணங்களாக பாதுகாப்பான பொதுச் சூழல், தரமான சுகாதார அமைப்பு, சிறந்த உள்கட்டமைப்பு, வேகமான இணைய சேவை மற்றும் அமைதியான சமூக சூழல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரத்திலும் மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியும் என்ற நம்பிக்கை, இந்த ஆய்வில் முக்கிய மதிப்பீட்டு அம்சமாக உள்ளது.

மறுபுறம், சோலோ டிராவலர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக வெனிசுலா குறிப்பிடப்பட்டுள்ளது. 9.74 என்ற அதிக ரிஸ்க் இன்டெக்ஸைப் பெற்றுள்ள அந்த நாட்டில் பாதுகாப்பு குறித்த அச்சம், சுகாதார வசதிகள் உள்ள சவால்கள் மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பெரு, காபோன், கொலம்பியா, பொலிவியா, ஜமைக்கா, கயானா, ஈக்வடார், டிரினிடாட் மற்றும் டொபாகோ, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஸ்கொயர்மவுத் வெளியிட்டுள்ள இந்த தரவரிசை, உலக அமைதிக் குறியீடு, சுகாதாரக் குறியீடு, இரவு நேர பாதுகாப்பு உணர்வு, மருத்துவமனை வசதிகள், மொபைல் இணைய வேகம் மற்றும் உலக இடர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரவுகளின் அடிப்படையில் குறியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பு மற்றும் அவசரகால வசதிகளையும் கருத்தில் கொண்டு பயண முடிவுகளை எடுப்பது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.