கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகே நடைபெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஜூலை 23ம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்துக் கொழும்பு குற்றப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் அந்நாளில் மூன்று சீன நாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுத் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள எஞ்சிய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்யக் இலங்கை பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தேடப்பட்டு வரும் அந்த மூன்று சீன சந்தேகநபர்களும் தற்போது இலங்கையிலேயே இருப்பதாகவும், அவர்கள் நாட்டிற்குள் நுழையப் பயன்படுத்திய சுற்றுலா விசா காலாவதியாகிவிட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வான் வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ சட்டவிரோதமாக நாட்டிலிருந்து தப்பியோட முயலக்கூடும் என எச்சரித்துள்ள பொலிஸார், அவர்களின் நடமாட்டம் குறித்து தகவல்களைப் பெற்று அவர்களைக் கைது செய்யும் நோக்கில் சீன நாட்டவர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்களைக் கைது செய்ய உதவும் வகையில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை ‘071 859 1735’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.



