எரித்திரியா நாட்டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் ஏமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பலில் 16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்கள் பணியில் இருந்தனர். ஏமன் கரையில் இருந்து 136 கடல் மைல் தொலைவில் சிபு 1 கப்பல் சென்று கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் கப்பலில் புகுந்தனர். அங்கிருந்து சோமாலிய கடற்பகுதிக்கு சிபு 1 எண்ணெய் கப்பலை அவர்கள் கடத்திச் சென்றனர்.
இந்த கப்பல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றி பல்வேறு நாடுகளுக்கு விநியோகம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது எண்ணெய் கப்பல் நிர்வாகம் சார்பில் சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கேமரூன் நாட்டைச் சேர்ந்த லுதுப் என்ற சரக்கு கப்பல் சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 6 இந்தியர்கள் உட்பட 10 ஊழியர்கள் பணியில் இருந்தனர். புன்ட்லேண்டின் மரேயா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறினர்.
அவர்கள் லுதுப் கப்பலை சோமாலிய கடற்பகுதிக்கு கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் துருக்கி ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து துருக்கி போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நேற்று சோமாலிய கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன. கடற்கொள்ளையர்கள் சென்ற படகு மீது துருக்கி ராணுவ ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து வட்டாரங்கள் கூறும்போது, “ஏமன், சோமாலியா கடல் பகுதிகளில் ஒரு எண்ணெய் கப்பல், ஒரு சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளன. இந்த கப்பல்களில் பணியாற்றும் 22 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்க சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 22 இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசும் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தன.
இதுதொடர்பாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது, ‘‘அண்மையில் அமெரிக்கா, சீனாவை சேர்ந்த சரக்கு கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர். சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகையை பெற்ற பிறகு இரு கப்பல்களும் விடுவிக்கப்பட்டன. தற்போது 22 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட இரு சரக்கு கப்பல்களையும் விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் பெரும் தொகையை கோரி வருகின்றனர்’’ என்றனர்.



