ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை, போர் குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்கள் மீண்டும் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 2 தமிழக வழக்கறிஞர்கள் ஜெனிவா செல்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 63-வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள Palais des Nations வளாகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சில், உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதித்து வருகிறது. குறிப்பிட்ட நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள், போர் குற்ற குற்றச்சாட்டுகள், காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.
இந்த கூட்டங்களில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம், சிறப்பு அறிக்கையாளர்கள், சர்வதேச விசாரணை அமைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
தற்போது நடைபெறும் 63-வது கூட்டத்தொடரில் சூடான், மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், உக்ரைன், வெனிசுலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
மீண்டும் இலங்கை விவகாரம்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி ஆகியவை கடந்த பல ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கையை 63-வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி தற்போது நடைபெற்று வரும் 63-வது கூட்டத்தொடரிலும் இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தமிழருக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கண்டறியப்படும் மனித புதைகுழிகள் தொடர்பான விவகாரமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள்தொடர்பான அகழ்வுப் பணிகளும், அதிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதும் ஈழத் தமிழர் அமைப்புகளால் சர்வதேச அளவில் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த பின்னணியில்தான் தற்போது இந்தியாவை சேர்ந்த 2 தமிழக வழக்கறிஞர்களும் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராம் சங்கர் ராஜா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன் ஆகிய இருவரும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 63-வது கூட்டத்தொடரில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Global Human Rights Defence என்ற மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ குழுவில் இடம்பெற்று இருவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கடைசி கூட்டத்தில் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை இரண்டு தமிழ் வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராம் சங்கர் ராஜா மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன் ஆகியோர் ஜெனிவாவில் நடைபெறும் 63வது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ICJ – International Court of Justice மற்றும் ஐசிசி – International Criminal Court அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் Global Human Rights Defense என்ற NGO அமைப்பு செயல்பட்டு வருகிறது.



