சவுதிக்கு புறப்பட்ட குழு அனோஜன் மரண தண்டனை விவகாரம்; !

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் அவரை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று (6) சவூதி அரேபியா செல்லவுள்ளது.

சவூதி அரேபியா செல்லும் இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹலீல் பாரிஸ் மற்றும் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனோஜனின் வழக்கு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்
இவர்கள் சவூதி அரேபியாவின் மேன்முறையீட்டு நீதிமன்ற சட்டத்தரணிகளுடன் அனோஜனின் வழக்கு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.

அனோஜன் தொடர்பில் சவூதி அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதன்படி, இருவரும் அண்மையில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை சந்தித்த நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான தலையீட்டுக்கு உதவுவதாக அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த அனோஜனுக்கு சமூக ஊடக பதிவொன்றினால் சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.