உலகின் மிக அரியவகை கடலாமை இனங்களில் ஒன்றான ‘கெம்ப்ஸ் ரிட்லி’ ரகத்தைச் சேர்ந்த கடலாமை ஒன்று, பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஆங்கிள்சி கடற்கரையில் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட சூழலில், 2 ஆண்டுகாலத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு சுமார் 5,000 மைல்கள் (8,000 கி.மீ) பயணம் செய்து தனது சொந்த வீடான மெக்சிகோ வளைகுடாவிற்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளது. ‘ரொஸ்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆமையின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மீட்புப் பயணம் சர்வதேச கடல்வாழ் உயிரின ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆங்கிள்சி கடற்கரையில் உறைபனி நீரில் சிக்கி, உடல் வெப்பநிலை ஆபத்தான நிலைக்குக் குறைந்து உயிருக்குப் போராடிய நிலையில் இந்தச் சிறிய ஆமையை நாய் ஒன்று கண்டறிந்தது. மீட்கப்பட்ட போது 1 கிலோவிற்கும் குறைவான எடையும் 25 செ.மீ நீளமும் மட்டுமே கொண்டிருந்த ரொஸ்ஸியை, ‘ஆங்கிள்சி சீ ஜூ’ நிபுணர்கள் பொறுப்பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பராமரித்து வந்தனர். நிபுணர்களின் தீவிர சிகிச்சையால் ரொஸ்ஸி தற்போது 21 கிலோ எடையும் 77 செ.மீ நீளமும் கொண்ட ஆரோக்கியமான ஆமையாக வளர்ந்துள்ளது.
நீருக்கு வெளியே நீண்ட தூரம் பயணம் செய்யும்போது ஆமையின் தோல் மற்றும் ஓடு வறண்டு போகாமல் இருக்க, அதன் உடல் முழுவதும் சிறப்புத் தடவு திரவங்கள் பூசப்பட்டுப் பாதுகாப்பாகப் பெட்டியில் அடைக்கப்பட்டது. ஆங்கிள்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் லண்டன் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 10 மணி நேரப் சரக்கு விமானப் பயணம் மூலம் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் நகரத்திற்கு ரொஸ்ஸி பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது. அங்கு மருத்துவப் பரிசோதனை செய்த நிபுணர்கள், ரொஸ்ஸி ஆண் ஆமை என்பதை உறுதி செய்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 18 அன்று ரொஸ்ஸி மெக்சிகோ வளைகுடாவின் கதகதப்பான கடற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்படவுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள ‘கெம்ப்ஸ் ரிட்லி’ கடலாமை இனப் பெருக்கத்திற்கு, பூரண குணமடைந்துள்ள இந்த ஆண் ஆமையின் வருகை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன.



