காதல் தோல்விக்கு பிறகு மனதில் ஏன் பழைய நினைவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன? மூளையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் வழிகள் குறித்து உளவியலாளர் விளக்குகிறார்.
காதல் முறிவு அல்லது நிராகரிப்பு என்பது ஒருவரை மனதளவில் மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. பலருக்கு வாழ்க்கையை முடிந்துவிட்டது போன்ற ஒரு உணர்வை தரும். சோகம், கவலை, பசியின்மை, தூக்கமின்மை, தொடர்ந்து அந்த நபரின் நினைவுகள் மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாமை போன்றவை காதல் தோல்விக்கு பிறகு பொதுவாக காணப்படும் அறிகுறிகள் ஆகும். இவை ஏன் நடக்கின்றன? காதல் தோல்விக்குப் பிறகு மூளையில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? அதிலிருந்து ஆரோக்கியமாக மீள்வது எப்படி?
மனிதர்களுக்கு மற்றவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் உளவியல் தேவை இயல்பாகவே உள்ளது.
உளவியலாளர் சுஹாஸ் கே கூறுகையில், “ஒருவர் நிராகரிக்கும்போது மூளை அதை ஒரு அச்சுறுத்தலாக கருதுகிறது. காதல் நிராகரிப்பால் ஏற்படும் மன வலியை, உடலில் ஏற்படும் உடல் வலியை போலவே மூளை செயலாக்குகிறது. அதனால்தான் காதல் தோல்வியால் ஏற்படும் வேதனை, உண்மையிலேயே உடல் வலியை போன்றே உணரப்படுகிறது” என்றார்.
சிலருக்கு மிகுந்த மன அழுத்தத்தால் இதய செயல்பாட்டிலும் தற்காலிக மாற்றங்கள் ஏற்படலாம். இதை மருத்துவ ரீதியாக Broken Heart Syndrome (Stress Cardiomyopathy) என்று அழைக்கின்றனர்.
அன்பானவர்களை இழப்பது அல்லது கடுமையான நிராகரிப்பு போன்ற தீவிரமான மன அழுத்தங்களால் இதய தசைகள் திடீரென பலவீனமடைந்து, மாரடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது அரிதானது என்றாலும், உணர்வுக்கும் உடல் நலனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை காட்டுகிறது.
காதலில் தோல்வி ஏற்பட்டவுடன், உடலில் பல்வேறு வேதியியல் மாற்றங்கள் தொடங்குகின்றன. அதில் முக்கியமானது நரம்பு மண்டலம் கார்டிசோல் என்ற மனஅழுத்த ஹார்மோன் ஹார்மோனை வெளியிடுகிறது. அதே நேரத்தில், மகிழ்ச்சி மற்றும் மன அமைதியுடன் தொடர்புடைய டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற ஹார்மோன்களின் அளவு மாறுபடுகிறது.
இதன் காரணமாகவே தொடர்ந்து சோகமாக இருப்பது, கவலை மற்றும் மன உளைச்சல், பசியின்மை, தூங்குவதில் சிரமம், கவனம் சிதறல், சோர்வு மற்றும் ஆற்றல் குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
காதல் தோல்விக்கு பிறகு மனம் மீண்டும் மீண்டும் அந்த நபரின் நினைவுகளுக்கு செல்வது மிகவும் இயல்பானது.
உளவியலாளர் கூற்றுப்படி, காதல் நிராகரிப்பு போன்ற தீவிரமான உணர்ச்சிக்குப் பிறகு, இழப்பிலிருந்து மீண்டு மீண்டும் பாதுகாப்பு உணர்வை பெற மனம் பழைய நினைவுகளையே தேடி செல்கிறது. அதனால்தான் அந்த நபரின் நினைவுகள் அடிக்கடி மனதில் தோன்றுகின்றன என தெரிவித்தார்.
இந்த வலியை தாங்கிக்கொள்ள மனம் வேலைகளில் மூழ்குவது, தன்னைத்தானே அல்லது மற்றவர்களைக் குறை கூறுவது போன்ற வழிகளில் முயல்கிறது. ஆனால், உண்மையான உணர்ச்சிகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அது தொடர்ச்சியான மன உளைச்சலை ஏற்படுத்தி வாழ்க்கையின் மீதான பிடிப்பையும் அர்த்தத்தையும் இழக்க செய்துவிடும்.
சோகத்தை மறைக்காமல், அது இயல்பான உணர்வு என்பதை ஏற்றுக்கொள்வதுதான் குணமடைவதற்கான முதல் படி. உடனடியாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டாம். அதேபோல், உங்களை நீங்களே அதிகமாக குறை சொல்லி வேண்டாம். ஒரு உறவு முடிவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இருக்காது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
இத்துடன் சீரான தூக்க சுழற்சி, சத்தான உணவுகள், தினசரி உடற்பயிற்சி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல் போன்ற பழக்க வழக்கங்களை கடைப்பிடியுங்கள். அதேநேரம், பழைய நினைவுகளைத் தூண்டும் புகைப்படங்கள் அல்லது சமூக வலைத்தளப் பக்கங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
புதிய திறன்களை கற்றுக்கொள்வது அல்லது புதிய செயல்பாடுகளில் ஈடுபடுவது தன்னம்பிக்கையை மீண்டும் உருவாக்க உதவியாக இருக்கும்.
காதல் தோல்விக்கு பிறகு சோகம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அந்த அறிகுறிகள் பல வாரங்களாக நீடித்தால் அல்லது அன்றாட வாழ்க்கையை பாதித்தால் நிபுணரின் உதவியை நாடுவது அவசியம். குறிப்பாக தொடர்ந்து நம்பிக்கையின்மை, அதீத கவலை, அன்றாட வேலைகளை செய்ய முடியாத நிலை, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் தென்பட்டால் உடனே உளவியலாளரை அணுகுவது நல்லது.
காதலில் தோல்வி ஏற்படுவது மிகுந்த வலியைத் தந்தாலும், அது மனித வாழ்க்கையின் ஒரு சாதாரண கட்டமே. மூளை இந்த நிராகரிப்பை உடல் வலியை போலவே உணர்வதால் வலி உண்மையாக தெரிகிறது.
காலப்போக்கில், முறையான சுய பராமரிப்பு, ஆரோக்கியமான வழிகள் மற்றும் அன்பானவர்களின் ஆதரவுடன் பெரும்பாலானோர் இந்த வலியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.
ஒருவேளை இந்த வேதனை வாரக்கணக்கில் தொடர்ந்தால் அல்லது அன்றாட வாழ்க்கையை பாதித்தால், தயங்காமல் ஒரு மனநல நிபுணரின் உதவியை நாடுவது முழுமையான குணமடைதலுக்கு வழிவகுக்கும்.



