எச்சரிக்கையால் துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானம் சவூதி அரேபியாவுக்குத் திருப்பிவிடப்பட்டது

 

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai என்ற விமானம், புதன்கிழமை சவுதி அரேபிய வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது அவசர சமிக்ஞையை வெளியிட்டதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான கண்காணிப்புத் தரவுகள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த விமானம் முதலில் சர்வதேச அளவில் பொதுவான அவசரநிலையை குறிக்கும் 7700 என்ற குறியீட்டை வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர், சட்டவிரோத தலையீடு அல்லது விமானக் கடத்தல் போன்ற சூழ்நிலையை குறிக்கும் 7500 என்ற அவசர குறியீடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, விமானத்தை நோக்கி இஸ்ரேலிய விமானப்படையின் போர் விமானங்கள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.News

இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனைகளை நடத்தியதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சுமார் 180 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. விமானத்தில் இருந்த விமானிகளுக்கு இடையிலான மோதல் காரணமாகவே இந்த அவசரநிலை ஏற்பட்டிருக்கலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், சம்பவத்திற்கான முழுமையான காரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.