உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள், ஜெட் டிரோன்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைனின் மீது ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் மற்றும் சி நகரங்களின் மீது இந்த வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதனால் பல கட்டிடங்கள்,அலுவலகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,தகவல் தொடர்பு மையங்கள் சேதமடைந்துள்ளன. தொடர் தாக்குதல்களால் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீவ் நகரில் உள்ள தேசிய அறிவியல் அகாடமி கட்டிடம் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூவர் காயமடைந்தனர் என மேயர் விடாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, ஜெட் சக்தியுடன் இயங்கும் புதிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி கீவ் நகரில் குடியிருப்பு, அலுவலகம், கிடங்கு, தரவுத்தள மையங்கள் போன்றவற்றை தாக்கியது. புதிய டிரோன்கள் பழைய ஷாஹெத் அல்லது ஜெரான்-2 மாடல்களை விட வேகமாக பறக்கின்றன, தடுக்கும் முயற்சிகளை கடினமாக்குகின்றன.



