ஜெம் வீரமணி வழக்கில் ரூ.45 கோடி சொத்து முதல் கணேசன் செல்போன் வரை… சிக்கும் தடயங்கள்!”

 

ஜெம் வீரமணி வழக்கில் <அடுத்து யார் சிக்கப்போகிறார்கள்?’

இந்த நிலையில், ஜெம் வீரமணியிடம் 23 ஆண்டுகளாக வேலை பார்த்த கணேசன் என்பவரை, சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் செப்டம்பர் 23-ம் தேதி கைதுசெய்திருக்கிறார்கள்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக மேலும் சிலரின் பெயர்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன

 

கிரானைட் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர் ஜெம் வீரமணி. சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் அவருக்குச் சிறுமிகளை அறிமுகப்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, அவர் கணவர் மகேந்திர சிம்கன், வீரமணியிடம் வேலை பார்த்த கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதில் கணேசனின் கைது, போலீஸ் விசாரணையில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அவர், வீரமணியிடம் 23 ஆண்டுகள் வேலை பார்த்தவர்.

வீரமணியின் பிசினஸ் தொடங்கி பர்சனல் வரை கவனித்துக்கொண்டவர். வீரமணியின் நிழலாகவே வலம்வந்தவர்..இது குறித்து நம்மிடம் பேசிய விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார், “வீரமணியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகளை அடையாளம் கண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறோம்.

அடுத்தகட்டமாக, வீரமணிக்குச் சிறுமிகளை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் சாந்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இதற்காக தனித்தனி டீம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.சாந்தியின் செல்போன் தொடர்புகளை ஆய்வுசெய்தபோதுதான் கணேசன் குறித்த தகவல் கிடைத்தது.

இந்த கணேசன், தொழிலதிபர் வீரமணியின் சுயரூபத்தை முழுமையாக அறிந்தவர். சாந்தியுடன் சேர்ந்து வீரமணிக்கு எதிரான வேலைகளைச் செய்ததால், கணேசனை வீரமணி தரப்பு வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது.

அதன் பிறகு சாந்தியுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். கணேசனின் செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வுசெய்தபோது, சில முக்கியத் தகவல்கள் சிக்கின.

அதில் சிறுமிகளுடன் வீரமணி தனிமையில் இருக்கும் வீடியோக்கள் இருந்தன. அந்த வீடியோக்கள் சாந்தி தரப்பினரின் செல்போன்களிலிருந்து கணேசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

சாந்தி தரப்பினரும் எங்களின் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.மேலும், கணேசனின் வாட்ஸ்அப் சாட்டிங்கில் சில ஆதாரங்கள் கிடைத்தன.

அவரின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கான பணம் குறிப்பிட்ட சிலருக்கு அனுப்பப்பட்டிருப்பதையும் கண்டறிந்திருக்கிறோம். செல்போனில் இருந்த சில தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சாந்தி குறித்து கணேசனிடம் விசாரித்தபோது, அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன.

அது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றனர். அடுத்து நம்மிடம் பேசிய சில போலீஸ் அதிகாரிகள், “இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வீரமணிக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பதற்கான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

2025-ம் ஆண்டு வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டதும், அவரை இந்த வழக்கிலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருக்கும் தகவல்களும் கிடைத்திருக்கின்றன.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் இந்தப் பணப் பரிவர்த்தனையில் தொடர்பிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்த விசாரணைப் பட்டியலில் ரயில்வே தொழிற்சங்கப் பிரமுகர் கண்ணையாவின் மகனான பிசினஸ்மேன் பிரகாஷ் என்பவர் இருக்கிறார். அவருக்கும், வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்திருக்கிறது.

இந்த வழக்கில் அர்ச்சனாவின் தொடர்புகள் குறித்தும் விசாரித்துவருகிறோம். வீரமணியின் நிழலாக இருந்த கணேசன், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பிரிந்து பிரகாஷைச் சந்தித்திருக்கிறார்.

அந்தச் சந்திப்பின் பின்னணி குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றனர்.

சொத்துகளை விற்ற வீரமணி!

இதற்கிடையில், பிப்ரவரி 5-ம் தேதி வீரமணி தன்வசமுள்ள 45 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்றதற்கான ஆதாரம் வெளியாகியிருக்கிறது.

அதன் பிறகுதான் வீரமணி மீது பதிவுசெய்யப்பட்ட போக்சோ வழக்கை முடித்துவைக்க, சென்னை போலீஸார் போக்சோ நீதிமன்றத்தில் ரிப்போர்ட் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே வீரமணி தரப்பு பல கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து வழக்கிலிருந்து தப்பியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பத்திரப்பதிவு ஆதாரமும் போலீஸாருக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

அது தொடர்பாக நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், “வீரமணியின் பெயரில் இருந்த சில சொத்துகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கின்றன.

அந்தச் சொத்துகள் எப்போது விற்கப்பட்டன, யாருக்கு விற்கப்பட்டன, அதன் மூலம் கிடைத்த பணம் எங்கு சென்றது என்பது தொடர்பான ஆவணங்களைச் சேகரித்துவருகிறோம்.

பணப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடத்திவருகிறோம்.சாந்தியும் கணேசனும் சிறுமிகளின் வீடியோக்களைக் காண்பித்து, வீரமணியிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டீலிங் பேசியதாகவும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரித்துவருகிறோம். அதனால்தான் செப்டம்பர் 23-ம் தேதி வீரமணி, சாந்தி, பிரகாஷ் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடத்தினோம்” என்றனர்.

செல்போன், பணப் பரிவர்த்தனை, சொத்து விற்பனை என அடுத்தடுத்து சிக்கும் தடயங்கள், வீரமணி வழக்கின் பின்னால் இருக்கும் நெட்வொர்க்கை நோக்கி நகர்கின்றன.

யாஸ்மின் அளித்த விளக்கம்!

இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த உதவி கமிஷனர் யாஸ்மின் தலைமையிலான போலீஸ் டீமிடம் சென்னை போலீஸ் உயரதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது, `இந்த வழக்கில் ஏன் சரிவர விசாரிக்கவில்லை… மேலிடத்திலிருந்து ஏதாவது அழுத்தம் வந்ததா?’ என்று கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

அதற்கு இன்ஸ்பெக்டர் ஒருவர், உயரதிகாரிகளின் பெயர்களைச் சொல்லியிருக் கிறார். இதையடுத்து, உதவி கமிஷனர் யாஸ்மின் டீம் அளித்த விளக்கம் கமிஷனரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, விரிவான அறிக்கை டி.ஜி.பி-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாஸ்மின், அவருடன் பணியாற்றிய போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்த காக்கிகள்.

சட்டம் என்ன சொல்கிறது?>

வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகரிடம் பேசினோம். “போக்சோ சட்டப்பிரிவு 19-ன்படி, குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்துத் தகவல் தெரிந்தால், காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோல், சட்டப்பிரிவு 21-ன்படி, புகார் அல்லது தகவல் கிடைத்தும் அதைப் பதிவு செய்யத் தவறும் காவல் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே, வீரமணிக்கு எதிரான ஆதாரங்கள் இருந்ததாகத் தெரியவரும் நிலையில், அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும், ஆரம்பகட்ட விசாரணையில் அதிகாரிகளுக்குக் கிடைத்த ஆதாரங்கள் என்னென்ன, அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்றார்.

“சி.பி.ஐ விசாரணை தேவை!”

வீரமணி வழக்கு குறித்து, குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம். “ஆரம்பகட்ட விசாரணையில் போக்சோ நீதிமன்றத்தில் ‘Action dropped’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை நீதிமன்றம் ஏற்காமல் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

வீரமணிக்குத் தமிழகத்துக்கு வெளியிலும் தொழில் தொடர்புகளும் செல்வாக்கும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இல்லையெனில், உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.

வீடியோ ஆதாரம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்திய போலீஸார், அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் விசாரிக்க வேண்டும்” என்றார்.