ரஷ்யாவில் இருந்து துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எப்போதாவது ரயிலில் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வரை பயணம் செய்வதை கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? கேட்கவே மிக சுவாரசியமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது அல்லவா? விரைவில் இந்த அசாத்தியமான பயணம் சாத்தியமாக வாய்ப்புள்ளது
இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியா வழியாக ஒரு புதிய ரயில் பாதையை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை ரஷ்யா சமீபத்தில் பகிர்ந்துள்ளது. கடற்போக்குவரத்து வழிகளை மட்டுமே அதிகமாகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும், கடல் வழிகளில் ஏற்படும் புவிசார் போர் பதற்றங்கள் அல்லது வணிக இ ரீதியான தடைகளைச் சமாளிக்கவும் ஒரு புதிய தரையியல் பாதையை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டு வருகிறது
துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை சென்றடையும் வகையில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரஷ்யா மற்றும் இந்தியா இடையே கடல் வழியை மட்டுமே சார்ந்திருக்காமல், நிலப்பரப்பு வழியாக நேரடி சரக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த முடியும்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போக்குவரத்து மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இன்னும் ஆரம்பக்கட்ட ஆய்விலேயே இருக்கிறது. மேலும், உடனடி பயணிகள் ரயில் சேவைக்கான திட்டம் என்பதை விட, நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை (Strategic Connectivity) மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். கப்பல்களை மட்டும் நம்பியிருக்காமல் ரஷ்யா, மத்திய ஆசியா, ஈரான் மற்றும் இந்திய துணைக்கண்டம் இடையே சரக்குகளை ஏற்றிச் செல்ல இந்த ரயில் பாதை ஒரு கூடுதல் தரையியல் வழித்தடமாக அமையும்.
இந்த ரயில் திட்டம் முற்றிலும் புதிதாக உருவாக்கப்படுவத அல்ல. ஏற்கனவே செயல்பட்டு வரும் சுமார் 7,200 கி.மீ நீளமுடைய International North-South Transport Corridor திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
ரஷ்யா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே உள்ள ரயில் உள்கட்டமைப்புகளை இணைத்து விரிவாக்குவதே இதன் முக்கிய உத்தியாகும்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆய்வுகள் நடத்தப்பட்ட பின் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.



