தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களை நடத்திய ஆயுததாரிகளைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை தென்னாப்பிரிக்க பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜோஹன்னஸ்பேர்க் மற்றும் கேப் டவுன் ஆகிய பகுதிகளுக்கு அருகில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதல்
ஜோஹன்னஸ்பேர்க்கிற்கு அருகில் உள்ள வெடேலா பகுதியில் உணவகமொன்றில் ஏகே-47 துப்பாக்கிகளுடன் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
சட்டவிரோத தங்கச் சுரங்கக் குழுக்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டியே இத்தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கேப் டவுன் நகருக்கு வெளியே அமைந்துள்ள உணவகமொன்றில் நடத்தப்பட்ட மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
வியாபாரப் போட்டியின் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்துள்ளார்.
சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



