நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள நார் ஃபூ பகுதியில் அமைந்துள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள ஹிம்லுங் ஹிமால் மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, குறைந்தது 14 நேபாள மலையேற்ற வீரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காணாமல் போயுள்ளனர்.
அடுத்த சில நாட்களில் வரவிருந்த வெளிநாட்டு மலையேற்றப் பயணிகளுக்காக, முகாமைத் தயார் செய்யவும், கயிறுகளைக் கட்டி பாதையைச் சீரமைக்கவும் முன்கூட்டியே மலைக்கு அனுப்பப்பட்டிருந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் காணாமல் போனவரகளில் மலையேற்ற வீரர்கள் மற்றும் முகாம் சமையல் பணியாளர்கள் உள்ளிட்ட உதவியாளர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள சுற்றுலாத்துறை மற்றும் மலையேற்ற முகாமை அமைப்புகள் நிலைமையைக் கண்காணித்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் அப்பகுதியில் நிலவும் கடுமையான மோசமான வானிலை காரணமாக மீட்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



