இந்தியாவை நம்பியிருக்கும் வங்கதேசம்- 10 மணி நேர மின்சார தட்டுப்பாடு

 

வங்கதேசத்தில் நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நாள்தோறும் 10 மணி நேரத்திற்கும் மேல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மின்சார சேமிப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கோடைக்காலம் வந்தாலே பவர் கட் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும். இது உலக வழக்கம். ஏனெனில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக மின் விசிறிகள், ஏசி, கூலர் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டி வரும். இது மின் தேவையை அதிகப்படுத்தி மின் உற்பத்தியில் நெருக்கடியை உண்டாக்கும். உள்ளூர் உற்பத்தி காலியானதும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில் வங்கதேசம் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தினசரி 10 மணி நேர மின் தடை
கடும் மின் தட்டுப்பாடு காரணமாக வீடுகள், அலுவலகங்கள், கடைகள், விவசாய தேவைகள், தொழிற்சாலை பயன்பாடு ஆகியவற்றில் மின் தடை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தலைநகர் டாக்காவிற்கு வெளியே நிலைமை படு மோசம். நாள்தோறும் 8 முதல் 10 மணி நேரம் வரை மின்சாரம் இருப்பதில்லை.

நிலைமையை சமாளிக்க கடைகள், மார்க்கெட்கள், ஷாப்பிங் மால்கள், வர்த்தக கண்காட்சிகள் உள்ளிட்டவை இரவு 8 மணி உடன் மூடிவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அலங்கார விளக்குகள், டிஜிட்டல் போர்டுகள் ஆகியவற்றை இரவு 7 மணிக்கே அணைத்துவிட வேண்டும். மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நிலைமையை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து டீசலை அதிகமாக வாங்க முடிவு செய்துள்ளனர்.

வீடுகளில் மின்சாரம் இல்லை என்பதை பொதுமக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. சமாளிக்கவும் முடியவில்லை. வெப்பத்தை தாங்க முடியாமலும், அன்றாட வீட்டு வேலைகளை செய்ய முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பல இடங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்காவிட்டால் நிலைமையை யோசித்து பாருங்கள்.