திலீபன் நினைவேந்தல் நடவடிக்கை சிங்கள மக்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது – சீலரத்ன தேரர்!

 

திலீபனின் உருவப்படத்தை வைத்து யாழ்ப்பாணத்தில் பாரியளவில் நினைவேந்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவது சிங்கள மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக பிரிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கக்கூடாது. தற்போது திலீபனின் உருவப்படத்தையும் உருவச்சிலையையும் வைத்து யாழ்ப்பாணத்தில் பாரியளவில் நினைவேந்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாண மாநகர சபையிலும் அவரை நினைவுகூரும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் எங்கே இருந்தது? அரசாங்கத்தின் தலைவர்கள் இவற்றை பார்க்கவில்லையா?

திலீபன் ஒரு பயங்கரவாதி. அவர் ஒருபோதும் அப்பாவியான ஒருவர் அல்ல. அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் திலீபனையும் நினைவுகூரும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகள் புலம்பெயர் அமைப்புகளுக்கு தேவையான வகையில் முன்னெடுக்கப்படுவதாகவே நாம் பார்க்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் புலம்பெயர் அமைப்புகள் இலங்கை முழுவதையும் தமது நடவடிக்கைகளால் சூழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

திலீபனை நினைவுகூரும் போது எமது நாட்டின் சிங்கள மக்களுக்கு மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அப்பாவிகளான ஏழைத் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் பிள்ளைகள்தான் யுத்தத்துக்கு சென்றனர்.

அந்த யுத்தத்தின் போது பல இராணுவத்தினர் தமது கைகளையும் கால்களையும் இழந்தனர். சிலர் கண்களை இழந்து பார்வையற்றவர்களாகினர். மேலும் சிலர் செவித்திறனையும் இழந்தனர். அந்த மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எவ்வளவு வேதனை இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூன்று தசாப்த கால யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம். அவ்வாறிருக்கையில், தற்போது புலம்பெயர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளாக இருந்தவர்களை நினைவுகூருகின்றனர் என்று கூறப்படும் போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் ஏற்படும் வேதனையை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாடு சிங்கள மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் மாத்திரம் உரித்தானது என்று நான் கூறவில்லை. இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் என அனைவரும் வாழ வேண்டும். ஆனால் அனைவரும் ஒரே நாட்டில் ஒரே சட்டத்தின் கீழ் வாழ வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டமும் மற்றொருவருக்கு வேறு சட்டமும் இருக்கக்கூடாது.Beaches & Islands

எனவே, இவ்வாறான விடயங்கள் இடம்பெறும் போது ஜனாதிபதி தலையிட்டு, அவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.