–
ஆகஸ்ட் 12 அன்று வட அரைக்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணம், வானியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. வானில் நிகழ்ந்த இந்த அரிய காட்சியைப் பார்ப்பதற்காக பல நாடுகளில் மக்கள் திரண்டனர்.
குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் 1999-ம் ஆண்டுக்குப் பிறகு, 27 ஆண்டுகள் கழித்து தெரிந்த முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். நிலவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நேராக வந்தபோது, சூரியனை முழுமையாக மறைத்தது. இதனால் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் பகல் நேரத்திலேயே சில நிமிடங்களுக்கு இருள் சூழ்ந்தது.கிரகணத்தின் முழு நிலை சில பகுதிகளில் சுமார் 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடித்தது.
குறிப்பாக ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் சூரியன் மறையும் நேரத்தில் கிரகணம் நிகழ்ந்ததால் மிகவும் அரிய காட்சியாக இது அமைந்தது.முழு சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் பிரகாசமான வெளிப்புற பகுதி நிலவால் மறைக்கப்பட்டது. இதனால் சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்புற வளிமண்டலமான ‘கொரோனா’ தெளிவாகத் தெரிந்தது. சாதாரண நேரங்களில் சூரியனின் அதிகப்படியான ஒளியால் கொரோனாவை தெளிவாகப் பார்க்க முடியாது. எனவே, இந்த நிகழ்வு விஞ்ஞானிகளுக்கும் முக்கியமானதாக அமைந்தது.
சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தின் அமைப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் சூரியனைச் சுற்றி நடைபெறும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கிரகணம் சிறந்த வாய்ப்பை வழங்கியது.கிரீன்லாந்தில் தொடங்கிய கிரகண நிகழ்வு சர்வதேச நேரப்படி மாலை 3.34 மணியளவில் தொடங்கி, இரவு 7.58 மணியளவில் நிறைவடைந்தது.
இந்தியாவில் அந்த நேரத்தில் இரவு நேரமாக இருந்ததுடன், கிரகணத்தின் நிழல் பாதையிலும் இந்தியா இடம்பெறவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண முடியவில்லை.2026-ம் ஆண்டில் நிகழும் ஒரே முழு சூரிய கிரகணம் என்பதால், உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் இதனை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். தற்போது கிரகணத்தின் அற்புதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாசா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.



