ஈரான் அதிகாரி அதிர்ச்சி தகவல் – போர் பல ஆண்டுகள் நீடிக்க கூடும்

டிரம்ப் ஆட்சி காலம் வரை போர் நீடிக்க கூடும் என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நீடித்து வரும் இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அதேசமயம், இருநாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்த சூழலில்தான், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக அந்நாட்டின் மீதான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கு மாறாக, ‘இந்த போர் நீண்ட காலம் தொடரக்கூடும்’ என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த ஆலோசகர் முகமது ரெசா நக்தி தெரிவித்திருக்கிறார். பிபிஎஸ் நியூஸ் ஹவர் என்ற ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவுக்கு எதிரான இந்த நீண்டகால போர் மூலம் எதிரிகளை சோர்வடைய செய்து, எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகளுக்கு அதற்கான விலையை உணர்த்துவதே எங்களின் நோக்கம். அமெரிக்க ராணுவம், தாங்கள் முன்பு கருதிய அளவுக்கு வலிமையானதாக இல்லை. ஈரான், தற்போது அதிகமான ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருகிறது.

போர் பல ஆண்டுகள் நீடித்தாலும், வெவ்வேறு இடங்களில் ஏவுகணைகளை உற்பத்தி செய்து தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியும். ஒருவேளை ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்துவிட்டாலும், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் பொருளாதார நலன்களை குறிவைக்கும் திறன் தங்களுக்கு இருக்கிறது’ என்றார். ஆனால், எந்தெந்த இலக்குகளை குறிப்பிடுகிறார் என தெரிவிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இரு நாடுகளுக்கும் இடையே அமைதி உடன்பாட்டை எட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இந்த சூழலில் ‘’ஹார்முஸ் ஜலசந்தியை தக்க வைத்து கொள்வோம்’’ என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதை ஈரான் நிராகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்கா அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மீண்டும் திறக்காது. ஈரான், தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறும் கூற்றுகளும், மீண்டும் மீண்டும் வெளியிடும் பதிவுகளும் யதார்த்தத்தை மாற்றிவிடாது’ என்று கூறியுள்ளார்.