ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு 2021ல் பொறுப்பேற்றது. அங்கு, 2022 மார்ச்சில் பெண்கள் ஆரம்ப பள்ளியை முடித்து உயர்நிலை பள்ளி செல்லவும், அதே ஆண்டு டிசம்பரில் பல்கலைக்கழம் செல்லவும் தடையை அமல்படுத்தியது. அந்த வகையில் உயர்நிலை பள்ளி கல்வியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 24 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் 2030ம் ஆண்டிற்குள் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும் என ஐநா சபை எச்சரித்துள்ளது. மேலும் 2 லட்சம் பெண் குழந்தைகள் புதிதாக பள்ளி கல்வியை இழந்துள்ளனர்.
ஆண் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்கள் கற்பிக்க விதிக்கப்பட்ட தடையால், கல்வித்துறையில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் தகுதியான 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களின் பற்றாக்குறை உருவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அங்கு, பல பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறை, சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லை. ஆரம்பப் பள்ளி அளவிலும் நிலைமை மோசமாக உள்ளது. 10 வயதுடைய குழந்தைகளில் 90 சதவீதம் பேருக்கு ஒரு எளிய வாக்கியத்தை கூட படிக்க தெரியவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 37% ஆக குறைந்துள்ளது.
‘
சர்வதேச அளவிலிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த போதிலும், பெண்களுக்கான கல்வி தடை என்பது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்பதில் தாலிபான் நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது. இதனால் அங்கு எதிர்கால தலைமுறையும், பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்படுவதாக சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.



